அரசியல்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம்.. அதிமுக-வில் உச்சக்கட்ட பரபரப்பு!

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 40 பேர் நீக்கம்.. அதிமுக-வில் உச்சக்கட்ட பரபரப்பு!
Edappadi Palaniswami and Sengottaiyan
அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவரது ஆதரவாளர்கள் மேலும் 40 பேரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.

செங்கோட்டையன் - இபிஎஸ் மோதல் பின்னணி

அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் பகிரங்கமாக முன்வைத்திருந்தார். இந்தக் கோரிக்கை தொடர்பாக 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்தார்.

செங்கோட்டையன் கெடு விதித்த மறுநாளே, அவரது கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கை எடுத்தார். இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.

40 பேர் நீக்கம்

இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில் செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், ஓ. பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்த செங்கோட்டையன், தான் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்தச் சூழலில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் நிர்வாகிகளைச் சேர்ந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 40 பேரை அதிமுக-வின் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவது, அதிமுக வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.