அரசியல்

ஒரு வயது தொட்டில் குழந்தை விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!

”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

ஒரு வயது தொட்டில் குழந்தை விஜய்.. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!
AIADMK Leader KT Rajendra Balaji Slams Tvk Vijay Political speech at madurai maanadu
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு அரசு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டி புத்தகங்களை வழங்கினார்.

விஜய்யின் நாடகக் கச்சேரி:

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய், அதிமுக குறித்துப் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. எடப்பாடி பழனிசாமி தினமும் மாநாடு நடத்தி வருகிறார். அப்படிப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி அடையாளம் தெரியாத தலைவர் போல அவர் பேசியுள்ளார்.

தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை குறைத்து மதிப்பிட்டுப் பேசுவது அவருடைய வீழ்ச்சியின் முதல் படி. அவருக்கு எந்த ஒரு வெற்றியும் கிடைக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு, இ.பி.எஸ்-ன் சுற்றுப்பயணத்தைக் கண்டு திமுகவே அஞ்சும்போது, ஒரு வயதுள்ள தொட்டில் குழந்தையாக இருக்கும் விஜய்யும் அவரது கட்சியும் அதிமுக குறித்துப் பேசுவது கேலிக்குரியது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இடையேதான் போட்டி என்று அவர் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், களத்தில் அவர்களால் நிற்க முடியாது. இவரைப் போன்று பலரைப் பார்த்துவிட்டோம். அதிமுகவை சிறுபிள்ளைத்தனமாகப் பேசியவர்கள் காணாமல் போனது தமிழக அரசியல் வரலாறு” என்றார்.

“ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது. அவரது பேச்சில் கருத்துக்களும் இல்லை, மக்களைக் கவரக்கூடிய எதிர்காலத் திட்டங்களும் இல்லை” என முன்னாள் அமைச்சர் .டி. ராஜேந்திர பாலாஜி பேசினார்.

பெண்களின் ஆதரவு யாருக்கு?

எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெண்களின் ஆதரவு ஸ்டாலினுக்குத்தான் உள்ளது, 2026 தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, “கே.என். நேரு ஒரு திமுக அமைச்சர். அவர், அதிமுக ஆட்சி அமைக்கும் என்று சொல்ல மாட்டார். தமிழக அரசியலில் துருவ நட்சத்திரமாக இ.பி.எஸ் புறப்பட்டு உள்ளார். நடிகர் விஜய் சினிமாவில் விளையாட்டுத்தனம் செய்தாரோ, அதையேதான் அரசியலிலும் செய்கிறார்.

எல்லாரும் அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டு முன்வாசல் வழியாகத்தான் செல்வார்கள். ஆனால், நடிகர் விஜய் பின்வாசல் வழியாக செல்கிறார்” என்று விமர்சித்தார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா?

நெல்லை பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும்’ என மீண்டும் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, “வட இந்தியத் தலைவர்கள் பேசும் கருத்துகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது கருத்துகள் மாறி சொல்லப்படும். தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். பாஜக எங்களுக்கு அடுத்த இடத்திற்கு வருவார்கள். எங்கள் கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றிபெறும்” எனத் தெரிவித்தார்.