அரசியல்

"பா.ஜ.க.வுக்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி"- SIR குறித்து துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு!

"எஸ்ஐஆர் பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Deputy Chief Minister Udhayanidhi
பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் இந்த நடவடிக்கை மூலம் பா.ஜ.க.வுக்குப் பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி நடப்பதாகத் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று சென்னை தீவுத்திடல் அருகே நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியினை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

வாக்காளர் திருத்தம் குறித்து உதயநிதி பேட்டி

அப்போது அவர், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் பா.ஜ.க.விற்குப் பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மூலமாக என்ன நடத்தப்பட்டது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

'எஸ்.ஐ.ஆர். மூலம் வெல்ல முயற்சி'

"எஸ்.ஐ.ஆர்.-ஐ (SIR - Special Intensive Revision) பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது" என்றும் உதயநிதி கூறினார். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியான முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.