அரசியல்

சட்டமன்ற தேர்தல் 2026: ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் 2026: ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!
சட்டமன்ற தேர்தல் 2026: ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே களத்தில் இறங்கியுள்ளது.

திமுக: ஆளும் கட்சியான திமுக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 'ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் மக்களைச் சந்தித்து வருகிறார்.

அதிமுக: எதிர்க்கட்சியான அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது

பாமக: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் 100 நாள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது இந்த வரிசையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட் 3, 2025) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தை பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், கோயம்பேட்டிலிருந்து தொடங்கினார்.

இரண்டு முக்கியமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, பூத் கமிட்டி ஏஜென்ட்கள் அமைப்பது மற்றும் தேர்தல் வியூகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ‘கேப்டனின் ரத யாத்திரை’ என்ற பெயரில், பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்கான நிகழ்ச்சிக்கும் தேமுதிகவினர் திட்டமிட்டுள்ளனர்.

இன்றும், நாளையும் பிரேமலதாவின் சுற்றுப்பயணத் திட்டம்:

ஆகஸ்ட் 4 ஆம் தேதியான இன்று காலை 10 மணியளவில், சென்னை, ஆவடி தொகுதியில் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, மாலை 4 மணி: திருத்தணியில் பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதியான நாளைக் காலை 10 மணியளவில் காஞ்சிபுரத்தில் பூத் கமிட்டிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மாலை 5 மணி: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தேமுதிகவின் இந்தக் சுற்றுப்பயணம், கட்சியின் பலத்தைக் காட்டி, 2026 ஜனவரியில் நடக்கவிருக்கும் கட்சியின் மாநாட்டில் கூட்டணிகுறித்த முடிவை அறிவிப்பதற்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.