அரசியல்

‘பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது’- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், “பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது” என்று அவர் கூறினார்.

‘பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது’- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
CM Stalin
வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, "பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது" என்று அவர் கூறினார்.

யாத்திரை மற்றும் ஸ்டாலினின் பங்கேற்பு

கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி சசாரம் நகரில் தொடங்கிய இந்த யாத்திரை 16 நாட்கள் நடைபெற்று, 1,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் நிறைவடைகிறது.

இந்நிலையில், ராகுல்காந்தி நடத்தி வரும் இந்த யாத்திரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். திறந்தவெளி வாகனத்தில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி ஆகியோருடன் பேரணியாகச் சென்ற அவர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின் உரை

அப்போது அவர், "உங்களையெல்லாம் பார்க்கதான் 2,000 கி.மீ. கடந்து இங்கு வந்திருக்கிறேன். பீகார் என்றாலே லாலு பிரசாத் யாதவ்தான் ஞாபகத்திற்கு வருவார். எத்தனையோ வழக்குகள் இருந்தாலும் பாஜகவுக்குப் பயப்படாமல் அரசியல் செய்தவர். அப்படிப்பட்ட ஊருக்கு வந்திருப்பது உற்சாகம் அடைய செய்துள்ளது.

திருடப்பட்ட ஒவ்வொரு வாக்கினாலும் அந்த மண் கனமாகியிருந்தது. மக்களின் வலியைத் தீர்க்கமான வலிமையாக மாற்றும் 'வாக்காளர் உரிமை பேரணி'யில் என் சகோதரர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருடன் இணைந்திருக்கிறேன்.

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் செல்லும் இடமெல்லாம் மக்கள் கடலென திரண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தைக் காக்க, மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்றிணைந்துள்ளீர்கள். உங்கள் இருவரின் நட்பு அரசியலைக் கடந்து உடன்பிறப்புகள் போன்றது. பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தரப்போவது இந்த நட்புதான்.

கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவே பீகாரைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் ராகுல் காந்தியின் பலம் ஆகும். இதுதான் தேஜஸ்வியின் பலம் ஆகும். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதை எதிர்த்து பீகார் போர்க்குரலை எழுப்பியிருக்கிறது என்பதுதான் வரலாறு ஆகும்.

பீகாரில் பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதியாகியுள்ளது. அதனால்தான் பாஜக தடுக்க முயற்சிக்கிறது. கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை மாற்றிவிட்டனர். பீகாரில் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை. மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதைப் பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.