அரசியல்

மதுரை மாநாட்டில் தொண்டரை தூக்கி எறிந்த பவுன்சர்கள்.. விஜய் மீது வழக்கு பதிவு!

தவெக மாநாட்டில் ரேம்ப் வாக் மேடையில் ஏற முயன்ற தொண்டரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் மீது முதல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநாட்டில் தொண்டரை தூக்கி எறிந்த பவுன்சர்கள்.. விஜய் மீது வழக்கு பதிவு!
Case registered against Vijay
மதுரை மாவட்டம், பாரபத்தி கிராமத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், மேடைக்கு ஏற முயன்ற தொண்டரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் ரேம்ப் வாக்

மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டிற்காக 2,500 ஆண் பவுன்சர்கள் மற்றும் 500 பெண் பவுன்சர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் பாதையில் விஜய் நடந்து சென்றார். ரசிகர்கள் யாரும் ஏறிவிடக்கூடாது என மேடையின் இரும்புக்கம்பிகளில் கிரீஸ் தடவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தூக்கி எறியப்பட்ட தொண்டர்

விஜய்யின் ரேம்ப் வாக் நடந்தபோது, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் பவுன்சர்களின் தடையையும் பொருட்படுத்தாமல் அவரை நெருங்க முயன்றனர். அப்போது, ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு தொண்டர் ரேம்ப் வாக் மேடை மீது ஏற முயன்றார். அவரைத் தடுத்த பவுன்சர்கள், அந்தத் தொண்டரை குண்டுக்கட்டாகத் தூக்கித் தரையில் எறிந்தனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, கட்சி மற்றும் பவுன்சர்கள் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியது.

விஜய் மீது முதல் வழக்கு பதிவு

இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர், பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து, சரத்குமார் தனது தாயாருடன் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று நேற்று (ஆகஸ்ட் 26) புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், குன்னம் போலீசார் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், கொலை மிரட்டல், கூட்டுத் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது, நடிகர் விஜய் மீது பதியப்பட்ட முதல் குற்றவழக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.