அரசியல்

தலைநகரில் அதிரடி மாற்றம்.. புது முகங்களை களமிறக்கும் திமுக!

சென்னையில் தற்போது பதவியில் இருக்கும் 8 எம்.எல்.ஏ-க்களை மாற்றிவிட்டுப் புதுமுகங்களைக் களமிறக்க திமுக அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.

தலைநகரில் அதிரடி மாற்றம்.. புது முகங்களை களமிறக்கும் திமுக!
DMK
தமிழகத்தில் இரண்டாவது முறையாகத் தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் திமுக தலைமை மிகத் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கட்சியின் செல்வாக்கை உறுதிப்படுத்தவும், தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையினால் ஏற்படும் இளைஞர் வாக்கு மாற்றத்தைச் சமாளிக்கவும், தற்போது பதவியில் இருக்கும் 8 எம்.எல்.ஏ-க்களை மாற்றிவிட்டுப் புதுமுகங்களைக் களமிறக்க அறிவாலயம் அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.

பென் நிறுவனத்தின் ரிப்போர்ட் மற்றும் ஸ்டாலினின் முடிவு

தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக, சிட்டிங் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடு மற்றும் மக்கள் மத்தியில் அவர்களுக்கிருக்கும் நற்பெயர் குறித்து 'பென்' (PEN) நிறுவனம் ரகசிய ஆய்வு நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளவர்களைத் தூக்கிவிட்டு, அந்த இடங்களில் வாரிசு அரசியல் முத்திரை இல்லாத உழைக்கும் இளைஞர்களைக் களமிறக்கத் தலைமை முடிவு செய்துள்ளது. விஜய்யின் வருகையால் ஏற்படும் இளைஞர் எழுச்சியைக் கட்டுப்படுத்த இதுவே சரியான வழி என திமுக கருதுகிறது.

மாற்றமில்லாத தொகுதிகளும் மீண்டும் களம் காண்போரும்

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் சில முக்கியத் தலைவர்கள் மீண்டும் அதே இடத்திலேயே களம் காண உள்ளனர். அதன்படி கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இவர்களுடன் ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன் நாகநாதன், துறைமுகத்தில் சேகர்பாபு, சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன், பெரம்பூரில் ஆர்.டி.சேகர் மற்றும் வில்லிவாக்கத்தில் வெற்றியழகன் ஆகியோரின் பெயர்களைத் தலைமை ஏற்கனவே டிக் அடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் தொகுதிகள்

செயல்பாடு திருப்திகரமாக இல்லாத 8 தொகுதிகளில் அதிரடி மாற்றங்கள் நிகழப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.கே.நகர் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் எபினேசர் மீதான அதிருப்தியால், அவருக்குப் பதிலாகச் செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் டாக்டர் செய்யது ஹஃபீஸ் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் திரு.வி.க. நகர் தனித் தொகுதியில் சென்னை மேயர் ப்ரியாவும், எழும்பூர் தனித் தொகுதியில் தமிழன் பிரசன்னாவும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளச்சேரி தொகுதியில் துணை மேயர் மகேஷ் குமாருக்கும், விருகம்பாக்கத்தில் தனசேகரனுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர்களைக் குறிவைக்கும் அறிவாலயம்

ராயபுரம், அண்ணா நகர், தியாகராய நகர் போன்ற தொகுதிகளிலும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்குப் பதிலாகத் துடிப்பான புதிய நிர்வாகிகளைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா நகரில் தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் மோகனுக்குப் பதிலாக அவரது மகன் கார்த்திக் பெயர் பரிசீலனையில் உள்ளது. சென்னையில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்றுவதுடன், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையிலேயே இந்த வேட்பாளர் மாற்றங்கள் அமையவுள்ளன.