அரசியல்

காரைக்குடியில் பரபரப்பு: எம்பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடியில் பரபரப்பு: எம்பி கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
Karthick Chidambaram
காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் ப. சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் அமைந்துள்ளது. இன்று காலை வழக்கம் போல அலுவலகத்தைத் திறக்க வந்த கட்சியினர், கட்டடத்தின் முன்புறம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

போலீசார் தீவிர விசாரணை

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். எம்பி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்படாததால், குற்றவாளிகளைக் கண்டறிவதில் சவால் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வீதியில் உள்ள மற்ற கட்டடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள கேமரா காட்சிகளைப் போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

காரணம் குறித்து ஆய்வு

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார், எந்த நோக்கத்திற்காகப் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்பது குறித்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் காரணங்களால் இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. எம்பி அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.