அரசியல்

எடப்பாடி பழனிசாமியால் வேதனை மலர் தான் வெளியிட முடியும்- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

“எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் வெளியிட முடியாது, வேதனை மலர் தான் வெளியிட முடியும்” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியால் வேதனை மலர் தான் வெளியிட முடியும்- அமைச்சர் ரகுபதி விமர்சனம்
Minister Ragupathi and Edappadi Palaniswami
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த நான்காண்டு சாதனை மலரை ஆட்சியர் அருணா தலைமையில் அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, “திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யாதது போன்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். அவரால் சாதனை மலர் வெளியிட முடியாது. வேதனை மலர்தான் வெளியிட முடியும். திமுக ஆட்சியில் கொண்டு வரும் அணைத்து திட்டமும் புதிய திட்டமே. இதில் ஒரு திட்டத்திற்காவது அவர் பிள்ளையார் சுழி போட்டிருந்தால் கூட உரிமை கொண்டாடலாம்.

எடப்பாடி பழனிசாமி பாஜகவை மதவாத கட்சி இல்லை என்று ஏற்றுக்கொண்டால் அதுபோல் ஒரு துரோகம் ஒன்றுமே கிடையாது. அவர் கூட்டணி வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாமே தவிர பாஜகவிற்கு வக்காலத்து வாங்குவதற்காக பாஜக மதவாத கட்சியே இல்லை என்று கூறுவது பச்சை பொய்.

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சொன்னது அப்பட்டமாக பொய் என்பதை நிரூபித்து திமுக மிகப்பெரிய வெற்றியை திருமயம் தொகுதியில் பெரும். அதற்கான அடித்தளங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு நாங்கள் செய்த நன்மையை போல் திருமயம் தொகுதியில் வேறு யாரும் செய்யவில்லை.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது மரியாதை நிமித்தமாகதான். இவர்களை திமுக கூட்டணியில் இணைப்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். கூட்டணியில் எந்த கணக்கை போட்டால் வெற்றி பெற முடியும் என்ற கணக்குத் தெரிந்தவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். அதனால் அவர் போடுகின்ற கணக்கு தப்புக்கணக்காக இருக்காது. வெற்றிக் கணக்காக இருக்கும்.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு அரசியல் வாழ்க்கை முடிவா ஆரம்பமா என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும். யாருடைய அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று போக போக தான் தெரியுமே தவிர திடீரென்று அரசியல் வாழ்க்கையில் ஜோசியம் சொல்ல முடியாது.

வெளிமாநிலத்தவர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதற்கான தகுந்த முறையீடுகளை நாங்கள் எடுத்து வைப்போம். வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை நிச்சயமாக தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. தமிழ்நாட்டின் வாக்காளர்களுடைய மனநிலை வேறு பீகார் மாநிலத்தின் வாக்காளர்களின் மனநிலை வேறு” என்று அவர் கூறினார்.