இந்தியா

பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்கமுடியவில்லை - பிரதமர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டதை காங்கிரசாலும், அதன் கூட்டணிக் கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லையெனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்கமுடியவில்லை - பிரதமர் குற்றச்சாட்டு
பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்கமுடியவில்லை - பிரதமர் குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கான 20-வது தவனைத் தொகையை அவர் விடுவித்தார். அதன்படி 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி விடுவிக்கப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலின்போது அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறைவேற்றியதாகக் கூறினார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் எனது இதயத்தில் துக்கத்தை ஏற்படுத்தியது. நமது மகள்களின் குங்குமத்தை இழக்கச்செய்தவர்களை பழிதீர்க்க நான் உறுதியளித்தேன். கடவுள் சிவபெருமான் ஆசியுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைமூலம் பஹல்காம் தாக்குதலுக்குப் பழிதீர்த்தேன்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத தலைமையகங்களைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாகத் தெரிவித்தார். ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் வலிமையை உலகமே கண்டு வியந்தது என்றும், 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையே ஆபரேஷன் சிந்தூரின் பலமாக இருந்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட நாளில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது ஏன் என எதிர்கட்சிகள் கேள்வியெழுப்புவதாகவும் எல்லா நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் அவர்களை அழைத்துக் கேட்க வேண்டுமா? எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்த அதே தலைவர்கள், தற்போது அவர்கள் கொல்லப்படும்போது வருத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தொடர்ந்து ஆயுதப்படைகளின் வீரத்தை அவமதித்து வருவதாகவும், பாகிஸ்தானைப் போலப் பயங்கரவாதிகளின் தற்போதைய நிலையைப் பார்த்துக் காங்கிரசார் அழுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.