இந்தியா

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து விடுதலை.. பத்திரிகையாளர்களின் முன் உடைந்து அழுத கெஜ்ரிவால்!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து விடுதலை.. பத்திரிகையாளர்களின் முன் உடைந்து அழுத கெஜ்ரிவால்!
Arvind Kejriwal
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் இன்று வழக்கிலிருந்து விடுவித்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லியில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: நீதிமன்றத்தின் கருத்து

இந்த வழக்கில் சுமார் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகச் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதி விசாரணையின் போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஹரிஹரன் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "கெஜ்ரிவால் மீதான எந்தக் குற்றச்சாட்டையும் உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களைச் சிபிஐ சமர்ப்பிக்கவில்லை. குற்றப்பத்திரிகை அளவில் மட்டுமே பெரிதாக உள்ளது, ஆனால் உள்ளே ஆதாரங்கள் என்று எதுவும் இல்லை" எனக் கூறி, கெஜ்ரிவால், சிசோடியா உட்பட மொத்தம் 23 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

"உண்மை வெல்லும்" - கெஜ்ரிவால் உருக்கம்

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அர்விந்த் கெஜ்ரிவால், "உண்மை எப்போதும் வெல்லும்" என்று தெரிவித்தார். பேட்டியின் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட அவர், பாரதிய ஜனதா கட்சி தன்னைச் சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றதாகக் குற்றம் சாட்டினார். மேலும், "பாஜக அதிகாரம் வேண்டுமென்றால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டுமே தவிர, எங்களை அச்சுறுத்தப் பொய் வழக்குகளைப் போட்டிருக்கக் கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டார்.