இந்தியா

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
Parliament
மக்களவையில் பெரும் அரசியல் அதிர்வுகளுக்கு மத்தியில், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என அஞ்சப்படும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது.

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, இன்று மக்களவையில் 'அரசியலமைப்புச் சட்ட 131-வது திருத்த மசோதா' மற்றும் 'தொகுதி மறுவரையறை மசோதா-2026' ஆகியவற்றை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதேபோல், யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், "இது அடிப்படை அரசியலமைப்பைத் தகர்த்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல்" என ஆவேசமாகத் தெரிவித்தார். இந்த மசோதா நிறைவேறினால் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கே ஆபத்து ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இது ஒரு அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா என்பதால், இதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். தற்போதைய நிலையில், மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 292 உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளுக்கு 233 உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்ய 251 பேர் ஆதரவு, 185 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா அறிமுகம் ஆக, பின்னர் எதிர்ப்பை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.