அரசியல்

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயம் தெரியாது- அமைச்சர் ரகுபதி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயம் தெரியாது- அமைச்சர் ரகுபதி விமர்சனம்
Minister Ragupathi and Edappadi Palaniswami
புதுக்கோட்டை திலகரத்திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற "மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது புதுக்கோட்டையில் காவிரி - குண்டாறு திட்டத்தைத் தொடங்கினார். அதற்கு அவர்கள் ஒதுக்கிய தொகை 700 கோடி. அதில் என்ன செய்ய முடியும்?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு, கரூர் மாயனூர் அருகில் தடுப்பணை கட்டி, அதன் மூலம் தண்ணீர் திறப்பு வாய்க்கால் வழியாக புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கொண்டு சென்றால் பொருளாதாரம் மிச்சமாகும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று உணர்ந்தார்.

ஆனால், பச்சை துண்டு விவசாயி தான் பழனிசாமி. அவருக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. தோளில் கலப்பையைக் கொண்டு செல்வார். எந்த நிலத்தில் இறங்கி உழுதார் என்பது அவருக்கே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு விவசாயி, இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை தந்துவிட்டேன், அதை முடக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்.

அதே திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியிருந்தால் புதுக்கோட்டைக்கு தண்ணீர் கிடைத்திருக்கும். நிலமெடுப்பு காரணமாக தினசரி சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். காவிரி குண்டாறு திட்டம் மக்களை பாதிக்காமல் செயல்படுத்தப்பட்டிருந்தால் ராமநாதபுரம் வரை பணிகள் நிறைவடைந்திருக்கும்.

எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டத்தில் கோளாறு உள்ளது. அதை சரி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதை நீதிமன்றம் மூலமாக சரி செய்து கொண்டிருக்கிற காரணத்தாலே திட்டம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது, பணமும் விரயமாகி கொண்டிருக்கிறது. விவசாயிகள் மீது அக்கறை உள்ள அரசு திமுக. வெற்று விளம்பரத்திற்காக ஆட்சி நடத்துகிற அரசு கிடையாது.

திமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரு திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. உருட்டல் பிரட்டலுக்கு சொந்தக்காரர்கள் எடப்பாடி பழனிசாமியும் விஜயபாஸ்கரும் தான்” என்றார்.