அரசியல்

தேமுதிக யாருடன் கூட்டணி: "இன்று எந்த அறிவிப்பும் இல்லை"- பிரேமலதா விஜயகாந்த்

"தேர்தல் கூட்டணி குறித்து இன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக யாருடன் கூட்டணி:
Premalatha Vijaykanth
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாட்டைப் பிப்ரவரி 3-ஆம் தேதி (இன்று) அறிவிப்பதாகக் கன்னியாகுமரி ரத யாத்திரையின் போது பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால் தேமுதிகவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை

தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைக்க அதிமுக மற்றும் பாஜக ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே சமயம், திமுக தரப்பில் 8 தொகுதிகள் ஒதுக்க முன்வந்திருப்பதாகவும், அதற்குப் பதிலாகத் தேமுதிக ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) சீட் கேட்டு நிபந்தனை விதித்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு நிலவுகிறது. இந்த இழுபறி காரணமாகவே கூட்டணி அறிவிப்பு தள்ளிப்போவதாகக் கருதப்படுகிறது.

எதிர்பார்ப்பை ஏமாற்றிய இன்றைய பேட்டி

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், முன்னதாகத் தான் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கினார். அவர் பேசுகையில், "கூட்டணி குறித்து இன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்போவதில்லை. ஊடகங்கள் இது தொடர்பாகத் தேவையற்ற செய்திகளைப் பரப்ப வேண்டாம். தேமுதிக தலைமை எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறதோ, அதுவே இறுதியானது" என்று கூறினார்.

"எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் தான்!"

தற்போது யாருடன் கூட்டணி என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழகம் மற்றும் தேசிய அளவில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே தேமுதிகவிற்குத் தோழமை கட்சிகள் தான்" என்றார். மேலும், இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

மீண்டும் ஒரு 'வெகு விரைவில்'

ஏற்கனவே கடலூர் மாநாடு, பின்னர் ரத யாத்திரை எனப் பலமுறை தேதி குறிப்பிட்டுப் பின்வாங்கிய பிரேமலதா, இன்றும் "வெகு விரைவில் நல்ல செய்தி வரும்" என்ற வார்த்தையையே மீண்டும் பயன்படுத்தியுள்ளார். இதனால், 2026 தேர்தலுக்கான தேமுதிகவின் கூட்டணி முடிவை அறிய அக்கட்சியின் தொண்டர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.