அரசியல்

"பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி"- துணை முதல்வர் உதயநிதி விமர்சனம்!

"பாஜகவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி நம் கண் முன்னே செயல்படுகிறார்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


Udhayanidhi Stalin
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு இன்று எழுச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மகளிருக்கான அடையாளமே திராவிட மாடல்

மாநாட்டில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "திமுக மாதத்திற்கு ஒரு மாநாடு மற்றும் சந்திப்புகளை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. மகளிருக்கான அரசு என்பதுதான் திராவிட மாடல் ஆட்சிக்கான உண்மையான அடையாளம். இந்தி திணிப்புக்கு எதிராகப் பெண்களைத் திரட்டிப் போராடிய பெருமை இந்த மண்ணுக்கு உண்டு. அந்தப் போராட்ட உணர்வு இப்போதும் தொடர்கிறது.

பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது சாடல்

தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது வழக்கம். ஆனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த காரணத்தால் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் முதல் நான்கு மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சியில் உள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நின்றது பாஜக அரசு. அத்தகைய பாஜகவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி நம் கண் முன்னே செயல்படுகிறார்.

திராவிட மாடல் பார்ட்-2

"திராவிட மாடல் பார்ட்-2 ஆட்சிக்கு மக்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள். நடைபெறவுள்ள தேர்தலில் நாம்தான் மீண்டும் வெற்றி பெறுவோம், நாம்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை" என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பிரம்மாண்ட மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்.பி., அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டுள்ளனர்.