அரசியல்

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் தான் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
Minister K.N.Nehru and Edappadi Palaniswami
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பிரதமர் மோடி 8 முறை தமிழகத்திற்கு வந்தபோதிலும், தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினார்.

திருச்சியில் 11 தாழ்தளப் பேருந்துகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "திருச்சி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் புதிய மார்க்கெட் பணிகள் அடுத்த 2 மாதங்களில் நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு வரும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நான் நேரில் சென்று விசாரித்தேன். அவர்களின் சம்பளத்தில் எந்தக் குறைப்பும் இருக்காது. 1,693 பேருக்கும் தொடர்ந்து வேலை கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை நாளை (ஆகஸ்ட் 11) தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் மக்களின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு, “திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை. அதிமுகவில் தான் கருத்து வேறுபாடு உள்ளது. அதனால் தான் அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர் செல்வம் வெளியேறினார். ஆனால், எங்கள் கட்சியில் இருப்பவர்கள் வெளியே செல்ல மாட்டார்கள்.

அடுத்த முறையும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது. நான்கு வருடம் கழித்து ஏன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டது என எடப்பாடி கேட்கிறார். ஆனால், நான்கு வருடம் கழித்து எடப்பாடி பழனிசாமி தற்போது தான் வெளியே வந்து உள்ளார்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, திமுகவை பாமக தலைவர் அன்புமணி விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நேரு, “திமுகவை விமர்சித்தால் தான் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும் என அன்புமணி ராமதாஸ் நினைத்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது” என்றார்.

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருவது குறித்த கேள்விக்கு, “பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்தபோதிலும், திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.