அரசியல்

செத்து சாம்பலானாலும் தனித்துதான் போட்டியிடுவோம்- சீமான் உறுதி

“செத்து சாம்பலானாலும் கூட தேர்தலில் தனியாக தான் போட்டியிடுவேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

செத்து சாம்பலானாலும் தனித்துதான் போட்டியிடுவோம்- சீமான் உறுதி
NTK Seeman
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், “செத்து சாம்பலானாலும் கூட தேர்தலில் தனியாக தான் போட்டியிடுவேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேர்தல் எப்போதும் முறையாக நடந்தது இல்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தேர்தல் நடந்த அன்றே முடிவுகள் வெளியிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல. அப்படி இருக்க தேர்தலில் முறைகேடு இல்லை என எப்படி சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

கோபி, சுதாகருக்கு ஆதரவு

ஆணவக்கொலை குறித்த வீடியோ வெளியிட்ட கோபி சுதாகர் மீது புகார் அளித்தது குறித்த கேள்விக்கு, “சாதிய அடக்குமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது கோபி சுதாகரின் பணி மட்டும் அல்ல, நம் அனைவரின் பணி. எத்தனை அறிஞர்கள் பிறந்த ஊரில் இன்னும் ஆணவக் கொலைகள் நடக்கிறது.

கோபி சுதாகர் மீது வழக்குப் போடுவதெல்லாம் சமூக தீண்டாமையை காட்டுகிறது. சமூகத்தில் உள்ள சாதிய கொடுமையை காட்டுகிறது. பெருமை எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாதி, மதத்தில் மட்டும் இருக்கக்கூடாது.

செத்து சாம்பலானாலும் கூட்டணி கிடையாது

நாதக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், “1.1 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரு கட்சி 8.22 சதவீதம் வாக்குகள் பெற்ற அரசியல் கட்சியாக மாறியது தமிழக வரலாற்றில் உண்டா?. விஜய்யின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் குறையும் என வதந்திகள் பரப்புகிறார்கள். இப்படி ஏன் பயம் காட்டுகிறார்கள் தெரியுமா?, அப்போதாவது கட்சி கலைந்திவிடும், ஏதாவது ஒரு கூட்டணிக்கு போய் விடுவார் என்பதற்குதான்.

செத்து சாம்பல் ஆனாலும் நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலில் தனித்தே போட்டியிடும். நான் மக்களுக்கானவன், என் வெற்றியும், தோல்வியும் மக்களுக்கானது. கூட்டணியில் இணைந்து நாதக தனது தனித்துவத்தை ஒருபோது இழக்காது. அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.