அரசியல்

அமைச்சர் துரைமுருகனின் இலாகா மாற்றம்- ஆளுநர் அறிவிப்பு

திமுகவின் பொதுச்செயலாளரும், மூத்த நிர்வாகியுமான துரைமுருகன் நீர்வளம், கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில் அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகனின் இலாகா மாற்றம்- ஆளுநர் அறிவிப்பு
minister duraimurugan portfolio change
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ரகுபதிக்கு இலாகாக்கள் மாற்றி ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, நீர்வளத்துறையுடன் சேர்த்து, இனி சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் நிர்வகிப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக அழைக்கப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திடீரென்று மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த துறை மாற்றம் எதற்காக? என அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழும்பியுள்ளது.
Image

கடந்த மாதம் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம், பெண்கள் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டிய கெடுபிடியால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் செந்தில்பாலாஜி. இதனைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் நீக்கப்பட்டனர். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு மின்சார துறையை கூடுதலாக ஒதுக்கப்பட்டது. வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை, கிண்டி, ராஜ் பவனில் (28.04.2025) திங்கட்கிழமை மாலை 06.00 மணியளவில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் புதிய அமைச்சராக பத்மனாபுரம் சட்டமன்ற உறுப்பினர் த. மனோ தங்கராஜ் புதிய அமைச்சராக பதவிப்பிராமணம் செய்தார். மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே எஞ்சியுள்ள நிலையில், அமைச்சரவை இலாகா மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது.