அரசியல்

வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? செல்வப்பெருந்தகை சவால்

இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? என செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.

வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா? செல்வப்பெருந்தகை சவால்
Edappadi Palaniswami and Selvaperunthagai
ராணிப்பேட்டை பஜார் வீதியில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பிரசன்னா என்பவர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காமராஜர் பிறந்த நாளை ஒட்டி நடைபெறவுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சி தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த கால ஆட்சியின் போது, 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தியுள்ளாரா? இதுவரை தமிழகத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி தயாரா?. தமிழகத்தில் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என அறிவிப்பு மட்டுமே வந்தது. திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டதா?

கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் கூறப்படாத பல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி. முதல் கோணல், முற்றிலும் கோணல் என்பதை போல அதிமுக - பாஜக கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. தமிழகத்தின் நலனுக்கு எதிராக, கல்விக்கு தேவையான நிதியை கூட வழங்காமல் மத்திய அரசு அலைக்கழித்து வருகிறது. இதற்கு தமிழக மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தக்க பாடத்தை புகட்டுவார்கள்” என தெரிவித்தார்.