அரசியல்

முதல் நாளே இப்படியா? விஜய் பிரசாரம் பாதியில் ரத்து!

தவெக தலைவர் விஜய் பிரசாரம் பாதியில் ரத்து...

முதல் நாளே இப்படியா? விஜய் பிரசாரம் பாதியில் ரத்து!
TVK Vijay
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு, அங்கேயே தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய விஜய், அதனைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால், சென்னை புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

கொளத்தூரில் 2 நிமிடப் பேச்சு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்தபோது, பாதுகாப்பு வளையத்தை மீறி அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிய நிலையில், காவல்துறையின் அறிவுறுத்தலின்படி விஜய் தனது உரையை வெறும் இரண்டு நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

வில்லிவாக்கம் பிரசாரம் ரத்து

கொளத்தூரைத் தொடர்ந்து வில்லிவாக்கம் பகுதியில் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருதி அந்தப் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

காவல்துறை மீது தவெக புகார்

இது குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவிக்கையில், "பொதுமக்கள் மற்றும் தலைவர் விஜய்யின் பாதுகாப்பைக் கருதி வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவில்லை. போக்குவரத்து முறைப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறை தோல்வியடைந்துவிட்டது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.