அரசியல்

4 கார்.. 35 ஏக்கர் விவசாய நிலம்.. 50 கோடி கடன்: கமலின் சொத்துப் பட்டியல் முழுவிவரம்

மாநிலங்களவை தேர்தலுக்கு கமல்ஹாசன் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அவரின் சொத்துமதிப்பு விவரங்கள் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. அவர் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு விவரங்களை இப்பகுதியில் காணலாம்.

4 கார்.. 35 ஏக்கர் விவசாய நிலம்.. 50 கோடி கடன்: கமலின் சொத்துப் பட்டியல் முழுவிவரம்
Kamal Haasan Complete Asset Details
வைகோ, அன்புமணி ராமதாஸ், எம்.சண்முகம், எம்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன் உள்ளிட்டோரின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் வருகிற ஜூலை 24 ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில் வருகிற ஜூன் 19 ஆம் தேதி 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 9 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் 4 வேட்பாளர்களும், அதிமுக கூட்டணி சார்பில் 2 வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் திமுகவினை சேர்ந்த வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நேற்றைய தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவில் கமல் தனக்கு ரூ.49.67 கோடி கடன் உள்ளதாக அறிவித்துள்ளார். கமல் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் பின்வருமாறு-

கமல்ஹாசனின் அசையும் சொத்துகளின் விவரம்:

ரூ.59.69 கோடி மதிப்பிலான அசையும் சொத்து தன்னிடம் உள்ளதாக கமலஹாசன் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அதில் பின்வரும் அம்சங்கள் அடங்கும்.

1. கையிருப்பு ரொக்கம்: ரூ.2,60,639 (ரூ.2.60 லட்சம்) உள்ளது.

2. வங்கிக் கணக்குகள் மற்றும் வைப்பு நிதிகள்: ரூ.29.36 லட்சம் (ரூ.29,36,206) கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார் கமலஹாசன்

3. பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகள்: ரூ.5.50 கோடி (ரூ.5,50,32,071) முதலீடு செய்துள்ளார்.

4. நிதி நிறுவன முதலீடுகள் (NSS, தபால் சேமிப்பு, காப்பீடுகள்): ஹெச்.டி.எஃப்.சி ஓ.பி.சி பொதுக் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட் பாலிசியில் ரூ. 10,00,000 (பத்து லட்சம்) முதலீடு செய்துள்ளார்.

5. தனிநபர் கடன்கள்/முன்பணங்கள் (கொடுக்கப்பட்டவை): ரூ.43.73 கோடி (ரூ. 43,73,97,225) ஆகும். இதில் அரசு அதிகாரிகளிடம் நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி நிலுவைகள், பங்குதாரர்களுக்கான கடன்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்ட கடன்கள் ஆகியவை அடங்கும்.

6. மோட்டார் வாகனங்கள்: நடிகர் கமல்ஹாசன் தனது பெயரில் நான்கு வாகனங்களை வைத்துள்ளார். வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.8.43 கோடி (ரூ.8,43,70,032)ஆகும்.

அவற்றின் விவரம்:

---> மகேந்திரா பொலேரோ கார் (2021) - மதிப்பு ரூ.11.05 லட்சம் (ரூ.11,05,000)
---> மெர்சிடிஸ் பென்ஸ் கார் (2021) - மதிப்பு ரூ.2.54 கோடி (ரூ.2,54,70,709)
---> பிஎம்டபிள்யூ புதிய வாகனம் (2023) - மதிப்பு ரூ.2.13 கோடி (ரூ.2,13,02,150)
---> லெக்சஸ் புதிய வாகனம் (2024) - மதிப்பு ரூ.3.64 கோடி (ரூ.3,64,92,173)

7. நகைகள்: சுமார் 1.4 கிலோ கிராம் கமல்ஹாசன் வசம் உள்ளது. இந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ.76 லட்சம் (ரூ.76,04,599) ஆகும்.

8. பிற சொத்துகள்: வகைப்படுத்தப்படாத "பிற சொத்துகள்" என்ற பிரிவில் ரூ.81,08,207 (எண்பத்தி ஒரு லட்சத்து எட்டாயிரத்து இருநூற்று ஏழு) மதிப்புடைய சொத்துகள் கமல் வசம் உள்ளன.

கமல்ஹாசனின் அசையா சொத்துகளின் விவரம்:

சுமார் ரூ.245 கோடி மதிப்பிலான அசையும் சொத்து தன்னிடம் உள்ளதாக கமலஹாசன் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அதில் பின்வரும் அம்சங்கள் அடங்கும்.

--> விவசாய நிலங்கள்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி கிராமத்தில் சுமார் 35.59 ஏக்கர் விவசாய நிலம் கமல் வசம் உள்ளது. அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.22,24,31,250 (ரூ.22.24 கோடி)

--> வணிக கட்டிடம்: ஆழ்வார்பேட்டை, சோழிங்கநல்லூர் பகுதியென என கமலுக்கு மொத்தமாக 4 வணிக கட்டிடங்கள் உள்ளன. இவற்றின் தோராய சந்தை மதிப்பு ரூ.111 கோடி (ரூ.1,11,12,00,000)

--> வீடுகள்/இருப்பிடம்: ஆழ்வார்பேட்டை, உத்தண்டி பகுதியென 2 இடங்களில் கமலுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளது. இவற்றின் தோராய சந்தை மதிப்பு ரூ.112 கோடி (ரூ.1,12,50,00,000)

கமல்ஹாசனின் கடன் விவரம்:

சுமார் ரூ.49.67 கோடி (ரூ.49,67,25,988) மதிப்பிலான கடன் தன் பெயரில் உள்ளது எனவும் கமலஹாசன் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதில் வாகன கடன், அடமான கடன், தொழிற்கடன் ஆகியவையும் அடங்கும். தற்போது வரை 9 நபர்கள் மாநிலங்களவை தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மறுபரீசலனை ஜூன் 10 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 12.

ஜூன் 19 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைப்பெறும் நிலையில், அன்று மாலை 5 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பணி நீட்டிப்பு காலத்தில் இருப்பதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன் மாநிலங்களவை தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.