அரசியல்

கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் - நயினார் நாகேந்திரன்!

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் - நயினார் நாகேந்திரன்!
கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் - நயினார் நாகேந்திரன்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில், திருச்சுழி சாலையில் இருக்கும் தனியார் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. வருகிற ஆகஸ்ட் 17 அன்று திருநெல்வேலியில் நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திருநெல்வேலியில் நடைபெறும் மாநாடுகுறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "திருநெல்வேலியில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி, 5 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி மாநாடு முதன்முதலாக நடைபெற உள்ளது. அதுகுறித்து முதன்முதலாக அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ஆய்வுக்காக வந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

அப்போது, 234 தொகுதிகளிலும் நீங்கள் பூத் கமிட்டி கூட்டம் நடத்துகிறீர்கள், அப்படியென்றால் கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் போட்டியிடும் தொகுதிகள் போக மீதியை வழங்குவீர்களா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "அதுகுறித்து கூட்டணி கட்சிகள் அனைவரும் இணைந்து முடிவெடுப்போம். அப்போது யார் யாருக்கு எத்தனை இடங்கள் என முடிவு செய்யப்படும்" என்றார்.

"தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இணைந்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "இது முற்றிலும் தவறான கருத்து. அண்ணா தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்" என்று கூறினார்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதால், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சில அதிருப்தியாளர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாகச் சிலர் கூறுகின்றனரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ஓ.பி.எஸ். எங்களுடன் கூட்டணியில் இருந்தால் நான் கருத்து கூறலாம். அவர் இப்போது விலகிப்போன பின்பு ஏதாவது கூறினால், அது தனிப்பட்ட நபரைப் பற்றிக் கூறும் கருத்தாக மாறிவிடும். அதனால் நான் அதைக் கூற முடியாது. கூட்டணியில் இருக்கும்போது நீங்கள் கேட்டிருந்தால் நான் சொல்லி இருப்பேன்" என்றார்.

டெல்லியில் காங்கிரஸ் எம்.பி-யிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் செயின் பறிப்பு மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் ஆகியவையும் நடக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. தென் மாவட்டங்களில் அதேபோலப் படுகொலைகள் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது. சொத்துவரி, மின்சாரக் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். நடுத்தரத் தொழில்கள் செய்பவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டிய அரசு" என்று கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல், தமிழகத்தைப் பற்றி மட்டுமே கூறினார்.

ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சி நடைபெற்று வருகிறதா?" என்று செய்தியாளர் கேட்டதற்கு, கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.