அரசியல்

காவலாளி அஜித்குமார் மரணம்.. அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

காவலாளி அஜித்குமார் மரணம்.. அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
AMMK protest announced
சிவகங்கை அடுத்த திருபுவனதில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமார் உடலில் இருக்கும் காயங்களை விளக்கும் அவரின் உடற்கூராய்வு அறிக்கை காவல்துறையினரின் காண்டுமிராண்டித் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது.காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்கள் அழிப்பு, காவல்துறையினருடன் திமுகவினர் கூட்டு சேர்ந்து நடத்திய பேரம் என அத்துனை சட்டவிரோதச் செயல்களையும் கண்டறிந்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சாட்டையை சுழற்றிய பின்பே, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ க்கு மாற்றியிருக்கிறது திமுக அரசு.

காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்துவிட்டு தற்போது "நடக்க கூடாதது நடந்துவிட்டது, ‘SORRY’ என்று கூறுவது வெட்கக்கேடானது. பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு உரிய தீர்வு கண்டு, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவலர்களே, சட்டத்தை தன்னிச்சையாக கையில் எடுத்துக் கொண்டு விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதே அடுத்தடுத்த காவல் மரணங்கள் அரங்கேற முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

காவல் மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்துவிட்டு காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை தமிழகம் அடைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம் முழங்கிக் கொண்டிருக்க, மறுபுறம் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல் மரணங்கள் அரங்கேறியுள்ளன.

எனவே, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், விசாரணை எனும் பெயரில் காவல்நிலையங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 4 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சந்தை திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.