அரசியல்

விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்.. மிகுந்த வேதனை அளிக்கிறது- எடப்பாடி பழனிசாமி

"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்.. மிகுந்த வேதனை அளிக்கிறது- எடப்பாடி பழனிசாமி
Edappadi Palaniswami
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசல் காரணமாக, சிறுவர்கள், பெண்கள் உட்படப் பலர் மயக்கமடைந்தனர். இதில், ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

இந்தச் சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

"கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக சார்பில் நிவாரணப் பணிகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்கப் பணித்துள்ளேன். மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

அரசுக்கு வலியுறுத்தல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகத் தமிழக அரசு மேற்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் முதல்வருக்கு வலியுறுத்துகிறேன்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.