அரசியல்

'அரசியல் வாழ்வில் நான் செய்த தவறு..' ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

அன்புமணியை மத்திய அமைச்சராகியது நான் செய்த தவறு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

'அரசியல் வாழ்வில் நான் செய்த தவறு..' ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
Ramadoss and Anbumani
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அன்புமணி மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் அடுக்கடுக்கான மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

'நான் செய்த தவறு..'

ராமதாஸ் கூறியதாவது, "அரசியல் வாழ்க்கையில் தான் சில தவறுகள் செய்துள்ளேன். அதில் முதல் தவறு, அன்புமணியை மத்திய அமைச்சராகியது தான். இரண்டாவது தவறு, அவருக்குக் கட்சித் தலைவர் பொறுப்பு தந்ததுதான்.

அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை. அருவருக்கத்தக்க வகையில் அவரது செயல்பாடு உள்ளது. நான் அமைதியாகப் பாமகவை நடத்திக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது என்று மக்கள் பேசுகிறார்கள். பாமகவில் பிளவு இருக்கிறது என மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அன்புமணி செயல்படுகிறார்.

ஆதரவாளர்கள் மீதான குற்றச்சாட்டு

அன்புமணியிடம் இருப்பது அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கும்பல். என்னை ஐயா என்று அன்போடு அழைத்தவர்கள் இப்போது அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டிப் பேசுகிறார்கள். என்னுடன் இருந்தவர்களுக்குப் பொறுப்புகள் கொடுத்து அன்புமணியும், அவரது மனைவியும் கோமாளித்தனம் செய்கிறார்கள்.

'ஆயுதங்களால் அடிதடி செய்கிறார்கள்'

இதற்கு முன்பு என்னோடு ஐந்து எம்எல்ஏக்கள் இருந்தனர். தற்போது அதில் 2 பேர் என்னோடு இருக்கிறார்கள், 3 பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய் விட்டார்கள். ஒரே கட்சியில் இருந்தவர்களைப் பிரித்துத் தன் பக்கம் வைத்துக்கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அடிதடி செய்கிறார்கள். அன்புமணி தரப்பு இன்னும் துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தவில்லை, அதையும் சீக்கிரம் பயன்படுத்திவிடுவார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.