அரசியல்

கரூர் சம்பவம்: காவலர்கள் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் சம்பவம்: காவலர்கள் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளது- எடப்பாடி பழனிசாமி
Edappadi Palaniswami
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாகவும், அரசின் அலட்சியமே 41 பேர் உயிரிழக்கக் காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். முதல்வரின் பதிலைத் தொடர்ந்து, பேரவைக் கூட்டத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இபிஎஸ் குற்றச்சாட்டு

வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறித்து விவாதம் வைக்க வேண்டும் என்று பேரவையை ஒத்திவைத்து கோரிக்கை வைத்தேன். பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் கருத்துகளைத் தெரிவித்த பிறகுதான், முதல்வர் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால், விதி எண் 56-ன் கீழ் பேச வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, முதல்வரை அழைத்து அரசின் கருத்துகளைக் கூற அனுமதியளித்தார்" என்று பேரவைத் தலைவர் மீது அதிருப்தி தெரிவித்தார்.

முதல்வர் சொன்ன கருத்துகளை அமைதியாகக் கேட்டுக்கொண்டதாகவும், கரூரில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் த.வெ.க. தலைவர் மீது செருப்பு வீசப்பட்டதையும், 41 பேர் பலியானதையும் பேரவையில் தான் கூறினால் நீக்கிவிடுவார்கள் என்பதால்தான், இங்கு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அலட்சியத்தால் 41 பேர் உயிரிழப்பு

இந்தக் கூட்டத்துக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிர்ப் பலியைத் தவிர்த்திருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். மேலும், "இந்த அரசு எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாகவும், ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாகவும்தான் பார்க்கப்படுகிறது. கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பைக் காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர்" என்றும் அவர் சாடினார்.

த.வெ.க. தலைவரின் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட முந்தைய கூட்டங்களுக்கு எவ்வளவு பேர் வந்தனர் என்பது காவல்துறைக்கும் உளவுத் துறைக்கும் தெரிந்திருக்கும் என்றும், அதற்கேற்றவாறே இடத்தை ஒதுக்கி, மக்கள் பங்கேற்கும் அளவுக்குக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் உயிர்ச் சேதத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காவலர்கள் எண்ணிக்கை முரண்பாடு

கரூர் பாதுகாப்புப் பணியில் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பார்த்ததாகவும், ஆனால் அந்தக் கூட்டத்தில் 500 காவலர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முக்கியமாக, "500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஏ.டி.ஜி.பி. கூறினார். ஆனால், 600-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டதாக இன்று முதல்வர் கூறுகிறார்" என்று சுட்டிக்காட்டிய அவர், "இதிலேயே எவ்வளவு முரண்பாடு இருக்கிறது. இதனால்தான், இந்தச் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.