அரசியல்

'நான் பதவி விலகுவதற்கான அவசியம் எதுவும் இல்லை..' நயினார் நாகேந்திரன் பதில்!

"நான் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விளக்குவதற்காக அவசியம் ஏற்படவில்லை" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

'நான் பதவி விலகுவதற்கான அவசியம் எதுவும் இல்லை..' நயினார் நாகேந்திரன் பதில்!
Nainar Nagendran
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விலகுவதாக அறிவித்தனர்.

இதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை டிடிவி தினகரன் முன்வைத்தார். மேலும், தான் கூட்டணியில் இருந்து விலக நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

'பதவி விலக அவசியம் இல்லை'

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக பரவும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "பதவி விலகுவதற்கான அவசியம் எதுவும் இல்லை. என் மீது பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். உள்துறை அமைச்சர் என் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து இருக்கிறார். இப்படி இருக்கும்போது நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் பத்திரிகை தர்மத்தை காப்பாற்ற வேண்டும் தனியார் நாளிதழுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

'அதிமுக பலமாக உள்ளது'

அதிமுகவை பாஜக உடைத்துவிட்டதாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "அதிமுக இன்றும் பலமாகவே உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் மக்கள் வெள்ளமாக திரண்டு வரவேற்பு அளிப்பதால் திமுகவுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. அதிமுகவை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று பதிலளித்தார்.