அரசியல்

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை
Thirumavalavan objects to Supreme Court verdict sentence on Relief To SriLankan Tamil Refugee
புதுக்கோட்டையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை அகதி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பினை குறித்து தனது வருத்தத்தினை தெரிவித்தார்.

முனைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு இலங்கை தமிழர் அல்லது ஈழத் தமிழர் தொடுத்த வழக்கில் இந்தியா சத்திரம் அல்ல பிற நாடுகளில் இருந்து வரக்கூடிய அகதிகளுக்கு எல்லாம் இங்கே இடம் கொடுப்பதற்கு என்று சொல்லி இருப்பது மனிதாபிமானத்திற்கு புறம்பானதாக இருக்கிறது.

புலம்பெயர்வது உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் நிகழக்கூடிய ஒன்று. புலம்பெயர்வதை நாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது. நாடு எல்லைகளின் மரபுகளை கொண்டு தடுக்க முடியாது” என்றார்.

கைப்பாவையாக செயல்படும் குடியரசுத்தலைவர்:

மசோதா மீது முடிவெடுக்க கால வரையறை நிர்ணயிக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி விளக்கம் கேட்டுள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, “அரசமைப்புச் சட்டமே அனைத்து அதிகாரங்களையும் நமக்கு வழங்குகிறது. புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான அடிப்படை கோட்பாடுகளைக் கொண்டு இருக்கிறது. மக்களவை எப்படி இயங்க வேண்டும் உச்ச நீதிமன்றம் எப்படி இயங்க வேண்டும் நிர்வாக துறை எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை தரக்கூடிய அரசமைப்புச் சட்டம் தான் மிகவும் உயர்ந்தது, மேலானது. இதனை பாசிச பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. குடியரசுத் தலைவரையே தனது கைப்பாவையாக பயன்படுத்தக்கூடிய வகையிலே இன்றைய ஆட்சியாளர்கள் பாசிச பாஜகவினர் செயல்படுவது மிகுந்த கவலை தருகிறது” என்றார்.

வடகாடு சம்பவம்: உரிய நீதி வேண்டும்

மேலும் பேசிய முனைவர் தொல் திருமாவளவன், “வடகாடு பிரச்சனை தொடர்பாக தலித் மீதான தாக்குதலை கண்டித்து இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதிதிராவிடச் சமூகத்தினருக்கு உரிய அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில் நம் மக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். அதை ஒட்டி நீண்ட காலமாக அவர்களின் பயன்பாட்டில் உள்ள பொது இடத்தையும் மக்கள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்த இடத்தில் உரிமை கோருவது அநீதியாகும். வேண்டுமென்றே தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு முயற்சி நடக்கிறது. ஆகவே அதிகாரிகள் முறையாக நீதிமன்றத்தில் தலையீடு செய்து ஆதிராவிட மக்களுக்கு உரிய இடத்தை அவர்களுக்கே மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அந்த கோரிக்கையை முதன்மை கோரிக்கையாக இந்த ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கிறோம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களோ உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு செல்வதே இல்லை. பல கலவரங்கள் நடக்கிற போது உடனடியாக வந்து போகிறவர்கள், அந்த இடத்தில் போய் பார்வையிடக் கூடியவர்கள், தலித்துகள் பாதிக்கப்படுகிறபோது அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இது நீண்ட காலமாகவே நீடித்து வருகிற அவலம். வடகாடு சம்பவம் என்பது ஜாதி அடிப்படையில் நடந்தது அல்ல என்று சொல்வது நீதியை மறுக்கிற ஒரு நடவடிக்கை. வெறும் சட்டம் ஒழுங்காக மட்டுமே பார்க்கிற காவல்துறையின் இந்த நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தை கட்சி கண்டிக்கிறது” எனவும் தெரிவித்தார்.