அரசியல்

திருப்பூரில் விஜய் பிரசாரம்: கடும் வெயில் தாக்கத்தால் வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கம்!

திருப்பூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்தில் வெயில் காரணமாக வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் விஜய் பிரசாரம்: கடும் வெயில் தாக்கத்தால் வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கம்!
TVK Tiruppur
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்தில ஏற்பட்ட கடும் நெரிசல் மற்றும் வெயில் காரணமாக வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக இன்று கோவை வழியாகத் திருப்பூர் வந்தடைந்தார். ஒரு நாள் பிரசாரம், ஒரு நாள் ஓய்வு என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் விஜய், நேற்று இடைவேளைக்குப் பிறகு இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகத் திருப்பூர் நோக்கி அவர் பயணிக்கும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

பெருமாநல்லூரில் தள்ளுமுள்ளு மற்றும் மயக்கம்

திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் விஜயைக் காண்பதற்காகக் காலை முதலே ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர். கூட்ட நெரிசல் மற்றும் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் அடுத்தடுத்து 10 பேர் மயக்கமடைந்தனர். இதில் 6 பேர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதியுற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தவெக வேட்பாளர் மயக்கம் - போலீசார் நடவடிக்கை

விஜயை வரவேற்கக் காத்திருந்த சூலூர் தொகுதி தவெக வேட்பாளர் சுகுமாரும் எதிர்பாராத விதமாக மயக்கமடைந்தார்; அவரைத் தொண்டர்கள் தண்ணீர் கொடுத்து தேற்றினர். நிலைமை தீவிரமடைந்ததைக் கண்டு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் தவெக நிர்வாகிகள், திரண்டிருந்த மக்களுக்குக் குடிநீர் வழங்கிச் சூழலைச் சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் இருந்ததால், அவர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.