அரசியல்

"தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்"- என்.ஆனந்த் பேச்சு!

"தவெக தலைவர் விஜய்யை எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது" என்று என். ஆனந்த் கூறியுள்ளார்.


N. Anand Speech
கரூரில் நடந்த மக்கள் சந்திப்புக் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக, அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுச்செயலாளர் என். ஆனந்த் உரை

கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு, கட்சியின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை விஜய் நியமித்திருந்தார். இன்று நடைபெற்ற வரும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தவெக தலைவர் விஜய்யை முதல்வராக்க கடினமாக உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

'தமிழக அரசியலின் மையப்புள்ளி விஜய்'

"த.வெ.க. தொடங்கி 2.9 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால், மக்களிடம் நமக்கு உள்ள பந்தம் 30 ஆண்டுகளாக இருக்கிறது. அதற்குக் காரணம் நம் தலைவர் விஜய்.

த.வெ.க. கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. எண்ணற்ற சோதனைகளையும் தடைகளையும் தாண்டி வந்திருக்கிறோம். தற்போது தமிழக அரசியலின் மையப்புள்ளி த.வெ.க. தலைவர் விஜய்தான். த.வெ.க. தலைவர் விஜய்யை யாரும் எளிதில் அசைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில், இவர் தாய்மார்களின் நம்பிக்கை.

இனி நம் வேலை எதிரிகளைத் தோலுரித்துக் காட்டுவதுதான். தலைவர் விஜய்யை முதல்வராக்கச் சத்தியம் செய்து தவமாய் இருந்து உழைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.