விளையாட்டு

IND vs ENG: ஸ்பின் எடுபடாத பிட்சில் அசத்திய வாஷிங்டன்.. 193 ரன் இலக்கு!

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.

IND vs ENG: ஸ்பின் எடுபடாத பிட்சில் அசத்திய வாஷிங்டன்.. 193 ரன் இலக்கு!
India Needs 193 for Victory as Washington Sundar Dazzles with 4 Wickets
இந்தியா- இங்கிலாந்து இடையே நடைப்பெற்று வரும் 3 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 ஆம் தேதி தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

வழக்கமான தனது “பேஸ்பால்” ஆட்டத்தை இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் கைவிட்டு இருந்தது பலருக்கும் வியப்பை தந்தது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார். ஜேமி ஸ்மித், கார்ஸ் போன்றோர் அரைச்சதம் விளாசிய நிலையில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 387 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் சதம் விளாசி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். பந்த், ரவீந்திர ஜடேஜா தங்கள் பங்குக்கு ரன்களை குவிக்க இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 387 ரன்கள் எடுத்தது.

வாஷிங்டன் மேஜிக்:

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது. இந்த மைதானத்தில் பெரிதாக ஸ்பின் எடுபடாத நிலையில், வாஷிங்டன் சுழலில் மாயவித்தை காட்டினார்.

முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஸ்மித், ஆகியோரை தனது சுழலில் வீழ்த்தினார். பெரிதாக பார்ட்னர்ஷிப் அமையாத நிலையில், இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் 4 விக்கெட்களையும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர். இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியை வெல்லுமா இந்தியா?

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடரானது 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன. இன்னும் ஒரு நாட்கள் மீதமுள்ள நிலையில், இந்த போட்டியில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைக்குமா? என இந்திய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.