இந்தியா

இன்சூரென்ஸ் பணத்திற்காக கொலை.. வசமாக சிக்கிய மருமகன்

தெலுங்கானாவில் இன்சூரென்ஸ் பணத்திற்காகக் மாமியாரை கார் ஏற்றி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்சூரென்ஸ் பணத்திற்காக கொலை.. வசமாக சிக்கிய மருமகன்
Murder for insurance money
தெலுங்கானாவின் சித்திப்பேட்டையில் ஒரு மருமகன் தனது மாமியாரை - இன்சூரென்ஸ் பணத்திற்காகக் கொலை செய்து, அதை வாகன விபத்தாகக் சித்தரித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீஸ் விசாரணையில் அவரது சதி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெத்தமாசன்பள்ளி அருகே கடந்த 7 ஆம் தேதி ராமவ்வா என்ற மூதாட்டி சாலை விபத்தில் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரு எஸ்யூவி கார் சாலையில் நடந்து சென்ற ராமவ்வை மோதியதைக் காட்டின.

இதனைத்தொடர்ந்து, போலீசார் வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அதனைக் கண்டுபிடித்தபோது, அது வாடகை கார் என்று தெரியவந்தது. மேலும், இரண்டு பேர் ஒரு நாளுக்காக அந்த எஸ்யூவி காரை வாடகைக்கு எடுத்ததாகவும், அவர்களில் ஒருவர் ராமவ்வாவின் மருமகன் டி. வெங்கடேஷ் என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து, வெங்கடேஷ் மற்றும் அவரது சகோதரர் கருணாகர் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்தனர். விசாரணையின் போது, இந்த விபத்து ரூ.55 லட்சம் ஆயுள் இன்சூரென்ஸ் பணத்தைப் பெறுவதற்காக திட்டமிட்டு மாமியாரை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர்கள், ‘'திரிஷ்யம்' திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு சரியான கொலையை அரங்கேற்ற முடியும் என்று நம்பியதாகக் கூறியுள்ளனர். ஆனால், இந்த திட்டம் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை.

இந்த கொலை நடந்த அன்று, மருமகன் வெங்கடேஷ் ராமவ்வாவை அவரது வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மின் இணைப்புக்கு அவரது கையொப்பம் தேவை என்று பொய் கூறியுள்ளார். மேலும், அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும் வீட்டிற்கு நடந்து செல்லும்படி அவர் ராமவ்வாவிடம் கூறியிருக்கிறார்.

அவர்களது திட்டப்படி, கருணாகர் பின்னர் எஸ்யூவி காரை கொண்டு ராமவ்வா மீது மோதியுள்ளார். இந்த விபத்து எந்த சந்தேகத்தையும் எழுப்பாது என்று இருவரும் கருதியுள்ளனர். ஆனால் சிசிடிவி கேமராக்கள் அவர்களின் நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. மேலும், இந்த கொலை குறித்து போலீசாரை இருவரிடமும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.