இந்தியா

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதி ஊர்வலம்: மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதி ஊர்வலம்: மலர்தூவி மக்கள் பிரியாவிடை!
Ajit Pawar funeral procession
மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விமான விபத்தில் உயிரிழந்த துணை முதல்வர் அஜித் பவாரின் உடல், இன்று அவரது சொந்த மண்ணான பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ அவரது இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது.

விமான விபத்து

நேற்று காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற அஜித் பவாரின் சிறிய ரக விமானம், தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அஜித் பவார், விமானிகள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் செய்தி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பாராமதியில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

கண்ணீர் மல்க பிரியாவிடை அளிக்கும் மக்கள்

இன்று காலை பாராமதியில் உள்ள அஜித் பவாரின் இல்லத்திலிருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. ஊர்வலம் செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று, மலர்களைத் தூவி கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்து வருகின்றனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, பாராமதி நகரமே மயான அமைதியில் மூழ்கியுள்ளது.

வித்யா பிரதிஸ்தான் திடலில் இறுதிச் சடங்கு

அஜித் பவாரின் உடல் மக்கள் அஞ்சலிக்காக ஊர்வலமாக வித்யா பிரதிஸ்தான் திடலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இன்று காலை 11 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. இந்தத் நிகழ்வில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி பாராமதிக்கு வருகை தருகிறார். மேலும், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த இறுதி நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.