விளையாட்டு

IND vs ENG: டிராவிட் சாதனையினை முறியடித்த ஜோ ரூட்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், ராகுல் டிராவிட்டின் சாதனையினை முறியடித்துள்ளார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்.

IND vs ENG: டிராவிட் சாதனையினை முறியடித்த ஜோ ரூட்!
IND vs ENG: Joe Root Surpasses Rahul Dravid's Record with 37th Test Century
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடரானது 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன.

லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட்:

இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூலை 10, 2025) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

வழக்கமான தனது “பேஸ்பால்” ஆட்டத்தை இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் கைவிட்டு இருந்தது பலருக்கும் வியப்பை தந்தது. நிதானமாக ரன்களை எடுப்பது இங்கிலாந்து அணியின் திட்டமாகவும் இருந்தது. தொடக்க வீரர்களான ஜேக் 18 ரன்களிலும், பென் டக்கட் 23 ரன்களிலும் நிதிஷ் ரெட்டி பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

போப் மற்றும் ஜோ ரூட் இங்கிலாந்து அணியினை சரிவிலிருந்து மீட்கத் தொடங்கியது. ஒருக்கட்டத்தில் போப் 44 ரன்களிலும், ஹேரி ப்ரூக் 11 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்ப மறுமுனையில் அசராமல் இருந்தார் ஜோ ரூட். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியபோது, முதல் பந்திலேயே பும்ராவின் பந்தினை எதிர்க்கொண்ட ரூட், லாவகமாக சிங்கிள் தட்டிவிட்டு டெஸ்ட் அரங்கில் தனது 37-வது சதத்தினை பதிவு செய்தார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் (36 சதம்) மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை (36 சதம்) முந்தி டாப் 5 வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள்:

1. சச்சின் டெண்டுல்கர்- 51
2. ஜாக் காலிஸ்- 45
3. ரிக்கி பாண்டிங்- 41
4. குமார் சங்கக்காரா- 38
5. ஜோ ரூட்- 37

மேலும், இந்த போட்டியில் அடித்த சதம் மூலம் இந்தியாவுக்கு எதிராக மட்டும் 11 டெஸ்ட் சதங்களை (60 இன்னிங்ஸில்) நிறைவு செய்துள்ளார் ஜோ ரூட். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும் இந்தியாவுக்கு எதிராக 11 டெஸ்ட் சதங்களை (46 இன்னிங்ஸில்) அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லார்ட்ஸ் மைதானத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சதம் விளாசி அசத்தியுள்ளார் ஜோ ரூட். இதற்கு முன்னதாக இவர் இந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளில் 143, 103 ஆகும். இந்தப்போட்டியில் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ராவின் துல்லியமான பந்து வீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

இரண்டாம் நாளின் முதல் ப்ரேக் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்களை எடுத்துள்ள நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது. 350 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியை, இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் செய்வார்களா? என இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.