இந்தியா

பூனை கீறியதில் சிறுமி காயம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!

கேரளாவில் வளர்ப்பு பூனை கீறியதால் காயமடைந்த 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பூனை கீறியதில் சிறுமி காயம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!
11-Year Old Girl in Kerala Dies After Being Scratched by Cat
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியை சேர்ந்த  ஹன்னா பாத்திமா (11) என்ற சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சமீபத்தில் சிறுமியின் வீட்டில் உள்ள வளர்ப்பு பூனை கீறியதால் அவருக்கு காயம் ஏற்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுமி ஹன்னாவுக்கு ரேபிஸ் தடுப்பூசி முதல் தவணை அடூர் தாலுகா மருத்துவமனையில் செலுத்தப்பட்டது. அடுத்த சில தினங்களில் சிறுமிக்கு பந்தளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இருப்பினும், வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே ஹன்னாவுக்கு வலிப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக அடூர் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும், சிறுமி ஹன்னாவின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் வென்டிலேட்டரில் வைக்கப்பட வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, சிறுமி வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்ட பிறகு அவரது நிலைமை சீரானது.

ஆனாலும், இந்த தொற்று அவரது மூளையை பாதித்ததால், நேற்று (ஜூலை 10) காலை அவர் உயிரிழந்தார். பூனையின் நகக்கீறலுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், சிறுமி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் பூனையின் நகக்கீறல் காரணமாக சிறுமி இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் டெங்கு அல்லது நிபா பாதிப்பு காரணமாக சிறுமி ஹன்னா பாத்திமா இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டறிய அவரது உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், பரிசோதனை முடிவு வந்த பிறகு அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.