விளையாட்டு

Sinner: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலியன்!

3 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைப்பெற்ற விம்பிள்டன் ஆடவருக்கான இறுதிப்போட்டியில், நடப்புச் சாம்பியன் அல்காரஸை வீழ்த்தி பட்டத்தை வென்றார் உலகின் நம்பர் 1 வீரர் சின்னர்.

Sinner: காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.. விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலியன்!
Sinner Makes History: First Italian to Win Wimbledon Men's Singles
விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில், இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் நான்கு செட்களில் (4-6, 6-4, 6-4, 6-4) கார்லோஸ் அல்கராஸை தோற்கடித்து, தனது முதல் விம்பிள்டன் பட்டத்தையும் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.

2025 ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கடந்த ஜூன் 30 ஆம் தேதி திங்கட்கிழமையன்று தொடங்கியது. பல்வேறு அதிரடியான திருப்பங்களுடன் நடைப்பெற்று வந்த விம்பிள்டன் போட்டியின் அரையிறுதிக்கு சின்னர், ஜோகோவிச், கார்லோஸ் அல்கராசு, டெய்லர் ஃபிரிட்ஸ் ஆகியோர் முன்னேறினர்.

பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைப்பெற்ற முதல் அரையிறுதி போட்டியில், கார்லோஸ் அல்கராசு- 6-4, 5-7, 6-3, 7-6(6) என்கிற செட் கணக்கில் டெய்லர் ஃபிரிட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி போட்டியில் உலகத் தரவரிசை டென்னிஸில் முதலிடத்தில் இருக்கும் ஜானிக் சின்னர், மற்றொரு பலம் வாய்ந்த நோவக் ஜோகோவிச்சை எதிர்க்கொண்டார். பரப்பரப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் சின்னர், ஜோகோவிச்சை நேரடி செட்களில் (6-3, 6-3, 6-4) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் பட்டம் வென்ற சின்னர்:

விம்பிள்டன் ஆடவருக்கான இறுதிப்போட்டி நேற்று நடைப்பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், உலகின் 2-ம் நிலை வீரரான அல்கராஸ் முதல் செட்டினை 4-6 என்ற கணக்கில் வென்றார். கடந்த 2 ஆண்டுகளாக நடைப்பெற்ற விம்பிள்டன் போட்டியினை அல்கராஸ் தான் வென்றிருந்தார் என்பதால், எப்படியும் ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தினை அடித்து விடுவார் என அல்கராஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

’அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காற்று அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்’ என்பது போல இரண்டாவது செட் முதல் சின்னர் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். முதல் செட்டினை தோற்ற நிலையில், அடுத்த மூன்று செட்கள் முறையே (6-4, 6-4, 6-4)என வென்றார்.

இதன் மூலம் தன் வாழ்வில் முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்று தனது கனவை நிறைவேற்றினார். இத்தாலியை சார்ந்த ஒரு வீரர் விம்பிள்டன் பட்டத்தை வெல்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வீரர்களின் உரை:

போட்டியின் நிறைவில் விம்பிள்டன் சாம்பியன் சின்னர் பேசுகையில், ”உங்களிடம் (அல்காரஸ்) ஏற்கனவே இரண்டு கோப்பைகள் உள்ளன. உங்களுக்கு எதிராக விளையாடுவது எப்போது மிகவும் கடினமானதாக இருக்கும்" என்று அல்கராஸைப் பாராட்டினார் விம்பிள்டன் சாம்பியன் சின்னர்.

”தோல்வி அடைவது எப்போதும் கடினமான தருணம், ஆனால் முதலில் நான் ஜானிக்கை வாழ்த்த விரும்புகிறேன். உண்மையிலேயே இந்த கோப்பையினை வெல்ல தகுதியான நபர் சின்னர்” என விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோல்வியுற்ற அல்கராஸ் போட்டி குறித்து பேசினார்.

மிச்சமிருக்கும் ப்ரெஞ்ச் ஓப்பன்:

டென்னிஸ் தொடர்களில், ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன், யூஸ் ஓப்பன் ஆகிய நான்கும் கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் என அழைக்கப்படுகிறது. சின்னர் விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம் தனது நான்காவது கிராண்ட்ஸ்லாம் (Australian Open 2024, US Open 2024, Australian Open 2025, Wimbledon 2025) பட்டத்தை வென்றுள்ளார். ப்ரெஞ்ச் ஓப்பன் பட்டத்தையும் விரைவில் வென்று டென்னிஸ் ஜாம்பாவன்கள் வரிசையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.