காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து... காதலை ஏற்க மறுத்த பெண் மீது அமிலம் வீச்சு... இப்படியான செய்திகளை நாம் அவ்வப்போது படித்திருப்போம். ஆனால் காதலிக்க மறுத்த இளைஞருக்கு விஷம் வைத்து கிலியை ஏற்படுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர்.
விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகேயுள்ள கிரிமேடு தெற்கு கிராமத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவரான ஜெயசூர்யாவும், அவரது வீட்டின் அருகே வசிக்கும் ரம்யா என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரியவரவே காதலன் ஜெயசூர்யாவின் வீட்டார் ரம்யாவுடன் பேசக்கூடாது எனவும், அந்த பெண் தங்கை முறை என்பதால் அவளுடன் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாரும் கண்டித்துள்ளனர். இதனால் ஜெயசூர்யாவும் அவருடைய காதலியான ரம்யாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த ரம்யா, ன்னுடன் பேசவில்லை என்றால் இறந்துவிடுவேன் எனஜெயசூர்யாவின் வாட்சப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன ஜெயசூர்யா பயத்தில் ரம்யாவுடன் மீண்டும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜெயசூர்யாவின் வீட்டிற்கு தெரியவரவே மீண்டும் அவரை கண்டித்து செல்போனில் ரம்யாவின் நம்பரை ப்ளாக் செய்துள்ளனர். இதனால் ஜெயசூர்யாவுடன் பேசமுடியாமல் இருந்த ரம்யா வேறொரு நம்பரில் இருந்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அவரிடம் பேசியுள்ளார்.
அப்போது ஜெயசூர்யாவின் குடும்பத்தினர்கள் அனைவரும் சுபநிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்ததால் ரம்யா ஜெயசூர்யாவிடம் தேனீர் போட்டு வருகிறேன் மொட்டை மாடிக்கு வா என கூறியுள்ளார். அதனை நம்பி மொட்டை மாடிக்கு சென்ற ஜெயசூர்யாவிற்கு தேனீர் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் ரம்யா. அதன்பின்னர் மறுநாள் உடல் நிலையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என ரம்யா வாட்சப் மூலமாக ஜெயசூர்யாவிடம் கேட்டுள்ளார். அதற்கு ஜெயசூர்யாவும் ஆமாம் என்று கூறவே ”என்னையே நீ வேனாம் என்று கூறிவிட்டதால் தேனீரில் எலிபேஸ்ட் கலந்து கொடுத்துள்ளேன்” என் பதில் அனுப்பி கிலியை உண்டாக்கியுள்ளார் ரம்யா.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயசூர்யா அவருடைய நண்பர்களுக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த அவர்கள் ஜெயசூர்யாவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஜெயசூர்யா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஜெயசூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஜெயசூர்யாவுக்கு 30 நாட்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கபட்டு வரும் நிலையில் தற்போது இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜெயசூர்யா உயிருக்கு போராடி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து அவரது தந்தை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக திருவெண்னைய்நல்லூர் போலீசார் ரம்யா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் கடந்த 2022ம் ஆண்டு கூல்டிரிங்ஸ் மற்றும் கசாயத்தில் விஷம் கலந்து காதலனை கொன்ற கிரீஷ்மா என்ற பெண்ணுக்கு அன்மையில் அம்மாநில உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்தநிலையில், கேரளாவை மிஞ்சும் விதமாக விழுப்புரத்தில் காதலை முறித்துக்கொண்ட காதலலனை, காதலியே தேநீரில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.