தமிழ்நாடு

அரியலூர் அருகே கற்பூர வெளிச்சத்தில் மட்டுமே விடிய, விடிய நடந்த நூதன பூஜை...10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்

அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் சித்திரை மாதம் பெளர்ணமி திங்கள்கிழமை சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கற்பூர வெளிச்சத்தில் காட்டில் நடைபெறும் கிடா வெட்டு நடந்தது.

அரியலூர் அருகே கற்பூர வெளிச்சத்தில் மட்டுமே விடிய, விடிய நடந்த நூதன பூஜை...10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்
அரியலூர் அருகே கற்பூர வெளிச்சத்தில் விடிய விடிய நடந்த நூதன பூஜை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் கொள்ளிடம் கரை ஓரம் எழுந்து அருள் பாலித்து வரும் ஆயிஅய்யனார் காட்டு கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி திங்கள்கிழமையை முன்னிட்டு பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை

இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் எந்த வருடத்தில் சித்திரை மாதத்தில் பௌர்ணமி ஆனது திங்கள்கிழமை வருகின்றதோ அன்று தான் இந்த கோவிலில் குல தெய்வமாக வழிபடும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

இந்தக் கோவிலில் குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள் அன்றைய தினத்தில் சாதாரண விளக்குகள் மற்றும் மின்சார விளக்குகள் இல்லாமல் கற்பூர வெளிச்சத்தில் பொங்கல் வைத்து கிடாவெட்டி தங்கள் நேர்த்திகடனை செலுத்துகின்றனர்.

கற்பூர வெளிச்சத்தில் பூஜை

இரவு 11.40 மணியளவில் நடைபெற்ற இந்த விழாவில் அரியலூர், கடலூர், தஞ்சாவூர் , மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குலதெய்வ வழிபாட்டு குழுவினர் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக கற்பூரமேற்றி கிடா வெட்டி வழிபாடு செய்தனர்.

இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாக்களை கற்பூர வெளிச்சத்தில் வெட்டி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.