தமிழ்நாடு

அதிமுக யாரிடமும் அஞ்சியதாக சரித்திரமே கிடையாது – இபிஎஸ்

கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக யாரிடமும் அஞ்சியதாக சரித்திரமே கிடையாது – இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று தென்காசி மக்களைச் சந்தித்த பிறகு அம்பாசமுத்திரம் வந்து சேர்ந்தார். நகர எல்லையிலிருந்து இபிஎஸ்ஸை வரவேற்கும் வகையில் இளைஞர்களின் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதையடுத்து அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் பகுதியில் குழுமியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், “அம்பாசமுத்திரம் நகரமே மக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. மக்கள் வெள்ளத்தில் நீந்திவந்து உங்களைச் சந்திக்கிறேன். எதிரிகள் மிரளும் அளவுக்குப் பிரமாண்ட மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறோம். இதுவே நம் வெற்றிக்கு அறிகுறி. கூட்டணியை வைத்து வென்றுவிடலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இந்த நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தால் அப்படிப் பேசமாட்டார்.

பெண்களுக்கும் பாதுகாப்பில்லை

50 மாத கால திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லை. பெயர் வைப்பார்கள், ஷோ காட்டுவார்கள். அதோடு முடிந்துவிடும். அதுதான் ஸ்டாலின் மாடல் அரசு. அம்மா ஆட்சியில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றினோம். இன்றைக்கு மக்கள் விரோத ஆட்சியில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. ஒரு மாவட்டத்தில் மட்டும் 20 நாளில் 11 கொலைகள். ஒட்டுமொத்த பெண்களுக்கும் பாதுகாப்பில்லை, பொம்மை முதல்வர் ஆள்வதுதான் இதற்குக் காரணம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். இந்தப் பகுதி விவசாய பூமி. வாழ்வாதாரத்தை பாதுகாக்க போடப்பட்ட திட்டங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது. உழைக்கும் வர்க்கத்தினர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலனுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தினோம். 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கினோம். குடிமராமத்துத் திட்டம் கொண்டுவந்தோம். அதையெல்லாம் கைவிட்டுவிட்டனர். ஏனெனில் முதல்வருக்கு விவசாயத்தை பற்றி ஒன்றுமே தெரியாது.

எடப்பாடி பழனிசாமியை எச்சரிக்கிறேன் என்று ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் பேசுகிறார். கம்யூனிஸ்ட் இருக்கிறதா, இல்லையா என்று தேடிப்ப்பிடிக்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி போற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் என்றால் என்னவென்று மக்கள் கேட்கும் அளவுக்குத் தேய்ந்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர். 2021 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இவ்வளவு கோடி ரூபாய் கொடுத்தோம் என்று திமுகவே காட்டிக்கொடுத்தது. திமுகவே இப்போது கப்சிப்பென்று இருக்கிறார்கள், இவர்கள் பலமாகக் கூவுகிறார்கள்.

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி

விலைவாசி உயர்வு, போக்குவரத்து ஊழியர்கள், விவசாயிகள் பிரச்னைகளுக்கு எல்லாம் போராடினார்களா? எதுக்குமே போராட்டம் நடத்தாத ஒரே கட்சி கம்யூனிஸ்ட்தான். ஏனெனில் அடுத்தமுறை சீட் கிடைக்காது, கூட்டணியிலிருந்து கழட்டி விடுவார்கள். அந்தப் பயத்தில் தான் மெளனம் காக்கிறார்கள். எங்களிடம் எகிறாதீர்கள். உங்களிடம் இருக்கும் அழுக்கைத் துடையுங்கள். பிரச்னையைப் பேசாவிட்டால் மக்கள் நிராகரித்துவிடுவார்கள். நான் டெல்டா பகுதியில் சென்றபோது விவசாயிகள், ‘அதிமுக ஆட்சியில் நிறைய கடன் கிடைத்தது இன்று சிபில் ஸ்கோர் கேட்டு நிராகரிக்கிறார்கள்’ என்று சொன்னார்கள். இதனை நான் பிரதமரிடம் சொன்ன அடுத்த நாளே இதற்குத் தீர்வுகிடைத்துவிட்டது. ஆகவே, எங்களைப் பற்றி விமர்சனம் செய்வதை விட்டுவிடுங்கள். உங்க கட்சியில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கம்யூனிஸ்ட் கட்சியைத் திமுக விழுங்குகிறது, அதை முதலில் பாருங்கள்.

ஏழை மாணவர்களும் மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தேன், அதன்மூலம் 2,818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். இப்படியொரு சாதனையாவது இந்த ஆட்சியில் சொல்ல முடியுமா? அதிமுக, திமுக ஆட்சிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. இன்று விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஏழை மக்கள் துன்பத்தில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் வறட்சி, புயல், கொரோனா காலத்திலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம். ஸ்டாலின் குடும்பம் வாரிசு அரசியல் நடத்துகிறது. திமுக ஒரு கட்சியல்ல கார்ப்பரேட் கம்பனி. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் துணிந்துவிட்டார்கள். இந்தத் தேர்தலில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பதவிக்கு வர முடியாது. மக்கள் விழித்துகொண்டார்கள். மிசா சட்டத்தில் சிறை சென்றோம் என்று சொல்வார் ஸ்டாலின். அப்படிப்பட்ட மிசாவில் அடைத்த காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளார். எமர்ஜென்சி, மிசா கொண்டுவந்தது காங்கிரஸ், உங்களைக் கைது செய்ததும் காங்கிரஸ், எங்களைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை.

அதிமுக அஞ்சியதாகச் சரித்திரமே கிடையாது

அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டதாகச் சொல்கிறார். இது தன்மானம் உள்ள கட்சி. யாராலும் எங்களை ஒன்றும் பண்ண முடியாது. அஞ்சியதாகச் சரித்திரமே கிடையாது. என்மீது கூட வழக்குப் போட்டுப் பார்த்தார், அவர்களே வாபஸ் வாங்குவேன் என்று சொன்னபிறகும், நான் வழக்கை நடத்தி நிரபராதி என்று நிரூபித்து உங்கள் முன்நிற்கிறேன். திமுக அமைச்சர்கள் வாய்தா வாங்குகிறார்கள் உச்ச நீதிமன்றமே குட்டுவைக்கிறது. ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு இறுதிக் கட்டம் வந்துவிட்டது ஒருவர் கடுமையான நோய் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் வென்டிலேட்டர் வைப்பார்கள். அப்படி வெண்டிலேட்டரில் தான் திமுக உள்ளது. 2026 தேர்தலில் மக்கள் மாற்றி வாக்களிக்கும்போது அதிமுக அரசு அமையும்.

இன்று லஞ்சம் ஊழல் இல்லாத துறையே இல்லை. பத்திரப்பதிவு துறையில் பணத்தை வெட்டினால்தான் காரியம் நடக்கிறது. மேலிடம் நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகம் கொடுத்தால்தான் பாட்டில் கிடைக்கும். ஏன் 10 ரூபாய் வாங்குகிறீர்கள் என்றால் மேலிடம் போகிறது என்கிறார் விற்பனையாளர். வருடத்துக்கு 5400 கோடி ரூபாய் மேலிடத்துக்குப் போகிறது. அப்படி ஊழல் நிறைந்த ஆட்சி வேண்டுமா?

மக்களை ஏமாற்ற தந்திரமா செயல்படுகிறார்கள்

சதுரங்க வேட்டை படத்தில், ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் அவரது ஆசையைத் தூண்ட வேண்டும் என்று வசனம் வரும். அதுபோலத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற 525 அறிவிப்புகளை வெளியிட்டு, ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். 98% நிறைவேற்றினாராம். இது உண்மையா? ஒருசிலவற்றை மட்டும் சொல்கிறேன், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை, சம்பள உயர்வும் வழங்கவில்லை. அதையே அதிமுக தான் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்தது. கேஸ்மானியம் கொடுக்கவில்லை, ரேஷன்கடையில் சர்க்கரை கொடுக்கவில்லை, கல்வி கடன் ரத்து செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் ரேஷன் கடையில் விலை இல்லாமல் பொருட்கள் கொடுத்தோம். கொரோனா காலத்தில் மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டோம். ஒரு வருடம் தினமும் உணவளித்தோம்.

உங்களுடன் ஸ்டாலின் என்று நோட்டீஸ் எடுத்துக்கொண்டு அரசு ஊழியர்கள் வருகிறார்கள். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருக்கிறதாம், அவற்றை 45 நாட்களில் தீர்த்துவைப்பாராம். ஆட்சி முடிய இன்னும் 7 மாதம் தான் இருக்கிறது. அதற்குள் எப்படி தீர்ப்பீர்கள்…? 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதாக முதல்வரே ஒப்புக்கொண்டுவிட்டார். நான்காண்டுகளாக ஏன் தீர்க்கவில்லை? மக்களை ஏமாற்ற தந்திரமா செயல்படுகிறார்கள். தேர்தல் வருவதால் தான் இப்படி ஏமாற்றுகிறார். அப்புறம் நலன் காக்கும் ஸ்டாலின். மக்கள் நலன் காக்க ஏற்கனவே பல திட்டங்கள் கொடுத்தோம். அதையெல்லாம் மூடிவிட்டனர்.

கடன் மட்டும் அதிகரிப்பு

ஏழைகள், தாழ்த்தப்பட்டோருக்கு இலவசமாக வீடுகள் கட்டிக்கொடுப்போம். மனையில்லாதவருக்கும் வீடு கொடுப்போம். ஏழை என்ற சொல் இல்லை என்று உருவாக்கிக் காட்டுவோம். நான் ஆட்சி ஏற்றதும் வறட்சி, புயல், கொரோனா காலத்திலும் நல்ல ஆட்சியைக் கொடுத்தோம். இன்று கொரோனா, புயல் என்று எதுவுமே இல்லை. ஆனால் நம்மைக் கடன்காரராக மாற்றிவிட்டார் ஸ்டாலின். தமிழகத்தை ஆண்ட அத்தனை அரசுகளின் கடனைவிடத் திமுக அரசின் கடன் அதிகம். 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை. கடன் வாங்குகிறீர்கள்… ஆனால், என்ன திட்டம் கொடுத்தீர்கள்? அதிமுக ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் கொண்டுவந்தோம், நீங்க என்ன கொண்டுவந்தீர்கள்? ஆனால், கடன் மட்டும் அதிகரித்து மாயாஜால அரசு மாதிரி தெரிகிறது.

அதிமுக ஆட்சியில் 2011ல் ஸோஹோ மென்பொருள் நிறுவனம் தொடங்கப்பட்டு, 1100 பேர் பணிபுரிகிறார்கள். அதுக்கு காரணம் அதிமுக அரசு. அதிமுக உங்க கட்சி, உங்க அரசு. மக்கள் எண்ணத்துக்கு ஏற்பச் செயல்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு, பைபை ஸ்டாலின்”என்று தெரிவித்தார்.