தமிழ்நாடு

அண்ணா பல்கலை வழக்கு.. சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு ஜூன்12ல் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 சாட்சிகள் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா பல்கலை வழக்கு.. சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு ஜூன்12ல் விசாரணை!
சென்னை உயர்நீதிமன்றம்
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞான்சேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு குறித்து, விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஞானசேகரன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக டிஜிபி தரப்பில் 17 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கடந்த 2013 ம் ஆண்டு சாஸ்திரி நகர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலியை பறித்து, பொதுமக்கள் மீது சோடா பாட்டில்களை ஞானசேகரன் வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்கு, கடந்த 2014ம் ஆண்டு நந்தம்பாக்கம் பகுதியில் பார்த்திபன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவருடைய செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், 2017ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நின்று, அங்கு வந்தவர்களை மிரட்டி செல்போன் பறித்தாக ஒரு வழக்கு, 2018 ம் ஆண்டு செங்கல்பட்டு மதுராந்தகத்தில் பைக் திருட்டு வழக்கு, 2019 ம் ஆண்டு கானத்தூர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து, வைர வளையல்கள், 71 சவரன் நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய வழக்கு என ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும், 9 வழக்குகளில் நீதிமன்றம் அவனை விடுவித்திருப்பதாகவும் மற்ற வழக்குகளில் காவல்துறை விசாரணையை முடித்து இறுதி விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலானாய்வு விசாரணை செய்து மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட 13 சாட்சிகளிடம் இதுவரை சென்னை மகிளா நீதிமன்றம் விசாரணை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரன் மீதான அனைத்து வழக்குளிலும் காவல்துறை விசாரணையை நிறைவு செய்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தேவையற்றது என டிஜிபி தரப்பில் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் ஜுன் 12 ம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ளது