தமிழ்நாடு

மதுபிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை!

தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளன.

மதுபிரியர்கள் கவனத்திற்கு.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை!
TASMAC Shop Closed
தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளன. தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்கான பின்னணி

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் இந்த கடைகளில், தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் இந்த வசூல் பல மடங்கு அதிகரிக்கும். இந்நிலையில், நாளை (பிப்ரவரி 1) வடலூர் ராமலிங்கர் (வள்ளலார்) நினைவு தினம் மற்றும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலெக்டரின் கண்டிப்பான உத்தரவு

இது தொடர்பாகச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிப்ரவரி 1-ஆம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும். அதேபோல், தனியார் கிளப்புகள் (FL2), ஹோட்டல்களில் உள்ள பார்கள் (FL3) மற்றும் இதர மதுபான விற்பனை கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள்

நாளை விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால், மது விற்பனை அதிகமாக இருக்க வாய்ப்புள்ள சூழலில் இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாராவது மறைமுகமாகவோ அல்லது கள்ளச்சந்தையிலோ மது விற்பனையில் ஈடுபட்டால், தமிழ்நாடு மதுபான விற்பனை விதிகளின்படி உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.