தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட் உட்பட 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் விசாரணை

சுங்க இல்லத்திற்கும் இமெயில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

சென்னை ஐகோர்ட் உட்பட 2 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீஸ் விசாரணை
சென்னை ஐகோர்ட் மற்றும் சுங்க இல்லத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை பெருநகரில் முக்கிய கட்டிடங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு அடிக்கடி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்கதையாகி உள்ள நிலையில், மிரட்டல் விடும் நபர்களை குறித்து தேடுதல் வேட்டையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில் இன்று நான்காவது முறையாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு துறை வீரர்கள், காவல்துறை மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சோதனைக்கு பின்பு வெடிபொருள் சம்பந்தமான எந்த ஒரு தடயமும் கிடைக்கப்பெறாததால் புரளி என அறிவித்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இதேபோன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்த பின்பு வைக்கப்பட்டுள்ள ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் வெடிக்கும் எனவும் மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரளி குறித்து போலீஸ் விசாரணை

இதனையடுத்து சுங்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஊழியர்கள் என ஏராளமானோர் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் வெடிகுண்டு நிபுணர்கள் முழுவதுமாக சுங்கத்துறை வளாகத்தை சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டலால் சுங்கத்துறை அலுவலகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அலுவலகத்தில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்டோரை வீட்டிற்கு அனுப்பினர். இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இமெயில் உயர் நீதிமன்ற வளாகம் சுங்கத்துறை அலுவலகம் அமெரிக்க தூதரகம் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஓரு இடத்திலும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால் புரளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.