தமிழ்நாடு

கோவை சி.எஸ்.ஐ சர்ச்சில் பரபரப்பு: வழக்கு தொடர்ந்த உதவி ஆயரை தடுத்த பவுன்சர்கள்!

கோவையில் சிஎஸ்ஐ சர்ச் பிஷப் மோசடி வழக்கில், வழக்கு தொடுத்த உதவி ஆயர் ஆலயத்திற்குள் நுழைய விடாமல் பவுன்சர்கள் தடுத்துள்ளனர் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

கோவை சி.எஸ்.ஐ சர்ச்சில் பரபரப்பு: வழக்கு தொடர்ந்த உதவி ஆயரை தடுத்த பவுன்சர்கள்!
கோவை சி.எஸ்.ஐ சர்ச்சில் பரபரப்பு: வழக்கு தொடர்ந்த உதவி ஆயரை தடுத்த பவுன்சர்கள்!
கோவையில் உள்ள சி.எஸ்.ஐ (CSI) சர்ச் பிஷப் திமோத்தி ரவீந்திரன் மீது மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, உதவி ஆயர் ராஜேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கலந்துகொள்ள ராஜேஷ் ஆலயத்துக்குள் செல்ல முயன்றபோது, பவுன்சர்கள் அவரைத் தடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு விவரம்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல திருச்சபை அலுவலகம், கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 125 தேவாலயங்களை நிர்வகித்து வருகிறது. இங்குப் பணிபுரியும் ஆயர்கள் மற்றும் ஊழியர்களின் பி.எஃப் பணத்தை மோசடி செய்ததாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் பிஷப் திமோத்தி ரவீந்திரன் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து, உதவி ஆயர் ராஜேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நிர்வாகக் குழுவில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வருவதாகவும், தலித் சமூகத்தினர் நிர்வாகத்திற்கு வந்ததை பொறுக்க முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ராஜேஷ் குற்றம்சாட்டுகிறார்.

ஆலயத்திற்குள் நுழைய எதிர்ப்பு

இந்த வழக்கில், உதவி ஆயர் ராஜேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆலயத்திற்குள் சென்று ஆராதனையில் கலந்துகொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், காவல்துறை சார்பிலும் இதற்கு ஆதரவான சட்டக் கருத்து (Legal Opinion) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கலந்துகொள்ள ராஜேஷ் சென்றபோது, ஆலய வாசலில் நின்ற பவுன்சர்கள் மற்றும் பிஷப் ஆதரவாளர்கள் அவரை உள்ளே நுழைய விடாமல் தடுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவு மற்றும் காவல்துறையின் அனுமதி இருந்தும், பவுன்சர்களை வைத்துத் தங்களை அவமதிப்பதாக ராஜேஷ் தரப்பினர் குற்றம்சாட்டி, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும், ராஜேஷ் தரப்பினர் இந்த வீடியோவை ஆதாரமாகக் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.