தமிழ்நாடு

'செக்குல ஆட்டுன சுத்தமான எண்ணெய்’ என கலப்படம்- திமுக பேரூராட்சி தலைவியின் கணவர் ஆலைக்கு சீல்

தமிழக- கேரளா எல்லை பகுதியான பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல பகுதிகளில் செக்கு தேங்காய் எண்ணெய் தரமான எண்ணெய் எனக் கூறி பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

'செக்குல ஆட்டுன சுத்தமான எண்ணெய்’ என கலப்படம்- திமுக பேரூராட்சி தலைவியின் கணவர் ஆலைக்கு சீல்
திமுக பேரூராட்சி தலைவியின் கணவர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம், தமிழக- கேரளா எல்லை பகுதியான பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை உட்பட பல பகுதிகளில் செக்கு தேங்காய் எண்ணெய் தரமான எண்ணெய் எனக் கூறி பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தேங்காய் எண்ணெய் விற்பனை

பளுகல் பகுதியில் செயல்பட்டு வரும் விற்பனை கூடம் மற்றும் உற்பத்தி நிலையத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
வி.எஸ்.டிரேடர்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த ஆலையிலிருந்து பாறசாலையை சேர்ந்த சமூக ஆர்வலர் அருண் என்பவர் தொடர்சியாகச் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் வாங்கி வந்துள்ளார்.


வெளியே 1- லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ.450 முதல் ரூ.560 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆலையில் மட்டும் லிட்டர் ரூ.250 எப்படி கிடைக்கிறது என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சமையலுக்கு ரூ.250 வாங்கிய எண்ணெயைத் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள உணவு பாதுகாப்புத்துறை ஆய்வகத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைத்தார்.

உணவு பாதுகாப்புத்துறையிடம் புகார்

அப்போது ஆய்வு முடிவில் பல கெமிக்கல், மாமிச கொழுப்பு மற்றும் பாமாயில் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தமிழக -கேரள எல்லையோர தின்பண்ட கடைகளில் இந்த எண்ணை வியாபாரம் படுஜோராக நடப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தவர் இது சம்பந்தமான ஆய்வு அறிக்கைகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததோடு கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இந்த நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் பளுகல் பேருராட்சி தலைவி திமுக லிஜி-யின் கணவர் விஜின் ஜெயபோஸ் மற்றும் அவரது தம்பி ஷஜின் ஜெயபோஸ் இருவரும் நடத்தி வரும் எண்ணெய் ஆலையெனத் தெரியவந்தது. இதனால் நடவடிக்கை எடுப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

ஆலைக்கு சீல்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இது சம்பந்தமான செய்திகள் வைரலானதை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் அந்த ஆலைக்கு ஆய்வுக்குச் சென்றபோது இந்த நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதி ஆனதும், லேபிள் ஒட்டாத 550 லிட்டர் தேங்காய் எண்ணெய் இருந்து அதிலிருந்து சோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டதோடு அந்த நிறுவனம் செயல்பட தடை விதிக்கப்பட்டதோடு எண்ணெய் ஆலைக்கு மற்றும் விற்பனை நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் பல கோடி போலி எண்ணெய் விற்பனை நடை பெற்று இருப்பதால் இதற்குத் தனி அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்தினால் மாவட்டத்தின் பல திமுக பிரபலங்கள் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.மேலும் இவர்களுக்குப் பல பகுதிகளில் பத்துக்கு மேற்பட்ட எண்ணெய் உற்பத்தி நிலையங்களும், விற்பனை நிலையங்களும் உள்ளது. எனவே அந்த ஆலைகளையும் சீல் வைத்து மூட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.