தமிழ்நாடு

4% வட்டியில் தங்க நகை கடன்.. தமிழக விவசாயிகள் எழுப்பும் கோரிக்கை

தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்துள்ளது.

4% வட்டியில் தங்க நகை கடன்.. தமிழக விவசாயிகள் எழுப்பும் கோரிக்கை
farmers demand to central govt to provide Gold and jewellery loan at 4 % interest
தங்க நகை கடன் பெறுவதில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது அனைத்து தரப்பினர் மத்தியில், அதிருப்தியை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய உத்தரவுகள் விவசாயிகளை எவ்வாறு பாதித்துள்ளது? என்பதை வெளிப்படுத்தும் விதமாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

"நகை கடன் பெறாமல் இந்திய விவசாயிகளும் - பொதுமக்களும் வாழ்க்கையை நடத்த முடியாத சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் பெறுவதில் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய நிதி துறையும், ரிசர்வ் வங்கியும் விவசாயிகள் 4% வட்டியில் பெற்று வந்த நகை கடன் திட்டத்தை நிறுத்தி வைத்து விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்பு வட்டி மட்டுமே கட்டி நகைக்கடனை புதுப்பித்து வந்த முறையை மாற்றி முழு தொகையையும் கட்டி மட்டுமே நகை கடன்களை ரத்து செய்து, மீண்டும் புதிதாக கடன் பெற வேண்டும் என்கிற விதியை கொண்டு வந்து விவசாயிகள், பொதுமக்களை கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கியது.

தற்போது அதற்கு அடுத்த கட்ட தாக்குதலாக தற்போது வெளியிட்டுள்ள கூடுதல் வழிகாட்டுதலில் நகைகளின் உரிமையை நிரூபிப்பதற்கு ரசீது அல்லது உரிமைச் சான்று போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும், நகை கடைகளில் வாங்கப்பட்ட தங்க காசுகளுக்கு நகை கடன் கொடுக்கப்பட மாட்டாது, 75% மட்டுமே நகையின் மதிப்பில் கடன் வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகளை கூர்ந்து கவனிக்கும்போது விவசாயிகளும், நடுத்தர மக்களும், ஏழைகளும் குறைந்த வட்டியில் நகை கடன் பெறுவதற்கு அனுமதிக்க கூடாது என்கிற நோக்கம் தெளிவாக இருக்கிறது.

மேலும் தங்க நகை கடன் பெறவேண்டிய சூழ்நிலையில் உள்ள விவசாயிகள், நடுத்தர மக்களை அதிக வட்டிக்கு தங்க நகை கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்களை நோக்கி நகர்த்துவதற்காக இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தெள்ளத் தெளிவாகியுள்ளது. சராசரியாக 9.75% வட்டியில் நகைக்கடன் பெற்று வரும் விவசாயிகள், பொதுமக்களை தற்போது தனியார் தங்க நகை கடன் அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து 22% சராசரி வட்டியில் நகை கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

மக்களிடம் 100% திரும்ப வசூலாக கூடிய தங்க நகை கடனுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி, 16.35 லட்சம் கோடிகளை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி அளிப்பதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அளிப்பதுடன், 4% வட்டியில் பெரும் தொழிலதிபர்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக வழங்குவது ஒருபுறம், மறுபுறம் சராசரியாக 9.75% வட்டியில் நகைக்கடன் பெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் - பொதுமக்களை சராசரியாக 22% வட்டியில் கடன் பெறவேண்டிய சூழ்நிலையை உருவாக்குவது என்பது இந்திய ரிசர்வ் வங்கி விவசாயிகள் - பொதுமக்களுக்கு எதிரானது என்பதை நிரூபித்திருக்கிறது.

கடந்த 1865-ஆம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் பத்திரப்பதிவுத்துறை தொடங்கப்பட்டது, 160 ஆண்டுகள் ஆன பின்னும் இன்றும் தங்களுடைய சொத்துக்களுக்கு அசல் ஆவணங்கள் இல்லாமல், தாய் பத்திரம் இல்லாமல் விவசாயிகள் சொத்துக்களை பதிவு செய்ய முடியாமலும் பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்தும் சொத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். தங்க நகைகள் அனைத்தும் விவசாயிகளின் குடும்ப சொத்துக்கள், வழி வழியாக அவைகள் பராமரிக்கப்பட்டு வருபவை, அவைகளுக்கு ரசீதும் கிடையாது, ஆதாரமும் கிடையாது, யாரிடம் இருக்கிறதோ அவர்கள் உரிமையாளர்கள் அவ்வளவுதான். இந்த நகைகளுக்கு ரசீது கேட்டால் எவ்வாறு விவசாயிகள் - பொதுமக்களால் கொடுக்க முடியும். எனவே இந்த நிபந்தனை முழுக்க முழுக்க பொருத்த மற்றது, நியாயமற்றது, அநியாயமானது.

மேலும் தங்க நகைகள் 916 ஹால்மார்க் நகைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பது, தற்போது கையில் வைத்திருக்கக்கூடிய அனைத்து நகைகளையும் விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்று, கூடுதல் விலை கொடுத்து 916 ஹால்மார்க் தங்க நகைகளை வாங்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட செயல்களை காணும்போது இது இந்திய மக்களுக்காக, விவசாயிகளுக்காக வேலை செய்கிறதா அல்லது தங்க நகை கடன் கொடுக்க விரும்பும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேலை செய்கிறதா என்கிற சந்தேகம் வருகிறது.

எனவே இதனால் மத்திய அரசின் மீதும், நிதித்துறை அமைச்சர் அவர்கள் மீதும் பொதுமக்கள்- விவசாயிகளிடையே கடுமையான அதிருப்தி மற்றும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் மட்டுமே அதிக அளவு தங்க நகை கடன் பெறப்படுகிறது, அதுவும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவு தங்க நகை கடன் வங்கிகளில் பொதுமக்களால் பெறப்படுகிறது, எனவே ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்கு எதிராக உள்ளதாகவே கருத வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இதில் தலையிட்டு விவசாயிகள் - பொதுமக்களுக்கு விரோதமாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை உடனடியாக திரும்பப் பெற்று, மிக மிக எளிமையாக விவசாயிகள் - பொதுமக்கள் தங்க நகை கடன் பெறுவதற்கான விதிகளையும், மீண்டும் விவசாயிகளுக்கு 4% வட்டியில் தங்க நகை கடன், ஒவ்வொரு ஆண்டும் வட்டி மட்டும் கட்டி மீண்டும் மறு அடகு வைக்கும் நடைமுறையையும் மீண்டும் அமல்படுத்த வேண்டுமாய் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.