சென்னை அண்ணா நகர் காவலர் குடியிருப்பை சேர்ந்த மேனகா (26), சென்னை மத்திய குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் காவலரான சுகுமாரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மேனகா 9 வாரமாக கர்ப்பமாக உள்ள நிலையில் கடந்த 29ஆம் தேதி திடீரென மேனகாவிற்கு அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டதால் அமைந்தகரையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் காய்ச்சல் குறையாததால் டெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 31ஆம் தேதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் பரிசோதனையில் வைரஸ் மூளை காய்ச்சல் என்பது தெரிய வந்ததையடுத்து, காய்ச்சல் அதிகமாகி சுயநினைவு இன்றி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேனகா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெண் காவலர் காய்ச்சலால் உயிர் இழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.