தமிழ்நாடு

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைகாலம்.. படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி

மீன்பிடி தடைகாலம் நிறைவடைய உள்ள நிலையில், மீன்பிடி படகுகளை மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் இன்று ஆய்வு செய்தார்.

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைகாலம்.. படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி
படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரி
மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடை காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் தடைகாலம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மீன்பிடி தடைகாலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், மீன்பிடி படகுகள் மற்றும் உயர் இஞ்சின்பொருத்தப்பட்ட நாட்டு படகுகள், விசைப்படகுகள் கடலுக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அனைத்து வகை படகுகளை ஆய்வு செய்ய மீன்வளத்துறை உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சித்சிங் சிங் காலோன் ஆலோசனையின் பேரில் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் எல்லைக்கு உட்பட்ட சீனியப்பா தர்கா, வேதாளை, மண்டபம் மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளை மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் இன்று காலை ஆய்வு செய்தார்.

நாட்டுப் படகுகளின் பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை, இயந்திரம் பொருத்தப்பட்டவை, இயந்திரம் பொருத்தப்படாதவை ,படகுகளின் பதிவு சான்று, மீன்பிடி உரிமம், காப்புறுதிச் சான்று, மானிய டீசல் அட்டை, டீசல் பாஸ் புத்தகம், இயந்திரத்தின் எண், குதிரை திறன் விவரம் உள்ளிட்டவைகளை மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மண்டபம் மீன்வளத்துறை ஆய்வாளர்கள், மரைன் போலீசார் மற்றும் மீனவர்கள் உடன் இருந்தனர்.