தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாகும் மழைப்பொழிவு

செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, நேற்று (செப். 11) இந்த மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று (செப். 12) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேசமயம், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. முன்னதாக, நடப்பு செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.