தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் மக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்

நீலகிரியில் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் மக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்
நீலகிரியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆட்சியர் ஆய்வு
நீலகிரியில் கனமழையால் தொடர்ந்து காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் உதகையில் வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி ட்ரீ பார்க் பகுதிக்குள் நுழைந்த கேரள சுற்றுலா பயணிகள் மீது மரம் விழுந்ததில் கேரள மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆதிதேவ் உயிரிழந்த நிலையில், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆதிதேவ் உடலுக்கு தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போல் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதாகவும், பாதிப்புகள் பெரிதளவில் ஏற்படவில்லை எனவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை எனவும் கூறிய அவர், மாவட்ட நிர்வாகம் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.


நீலகிரி மாவட்டத்தில் குறைவாக இரண்டு முகாம்களில் மட்டுமே குறைந்த அளவிலான நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பத்தாம் வகுப்பு மாணவன் இன்று மரம் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது துக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். இன்று இரவு கனமழை பெய்யும் பட்சத்தில் அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கனமழை காரணமாக நேற்று வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதாகவும், தற்போது தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊசிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தல்

மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களுக்குள் யாரும் செல்லக்கூடாது எனவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்தார். மேலும் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்திற்கு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குறித்து ஏதேனும் தகவல் வேண்டுமானால் கேரளா வயநாடு, மலப்புரம், கர்நாடகா சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்ட ஆட்சியரிடம் உதவி எண்கள் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் நேற்று இரவு முதல் காலை வரை 13 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் அதனை உடனடியாக வெட்டி அகற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.