தமிழ்நாடு

சுகுணா குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியது?

சோதனையில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

சுகுணா குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியது?
தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
சுகுணா குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இக்குழுமத்தின் முதன்மை நிறுவனமான, கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுகுணா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் (SFPL), கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிறுவனத்திற்கு இலங்கை, வங்கதேசம் மற்றும் கென்யாவிலும் துணை நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் கோழிப்பண்ணைத் தொழிலில் மிகப்பெரிய நிறுவனமான SFPL-இன் ஆண்டு வருமானம் ரூ.11,000 கோடியை தாண்டியும், அது தொடர்ந்து வருமான வரி கணக்குகளில் நஷ்டம் என்று காண்பித்து வரி செலுத்துவதை தவிர்த்து வந்தாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

தீவன உற்பத்தி ஆலைகளை நடத்தி வரும் SFPL, சமீபத்திய ஆண்டுகளில் அதன் உற்பத்திப் பொருட்களை பன்மடங்கு விரிவுபடுத்தியுள்ளது. சொந்தமாக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை விற்க டெல்ஃபிரெஸ் (Delfrez) என்ற பெயரில் சில்லறை விற்பனை நிலையங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 1000 விற்பனை நிலையங்களை திறப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், மதர்ஸ் டிலைட் (Mother's Delight) என்ற பெயரில் சோயாபீன் எண்ணெய் உற்பத்தியிலும் இறங்கியுள்ளது. பல ஆண்டுகளாக நஷ்டம் காட்டியும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதும், புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்துவதும் சாத்தியமற்றது.

வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிதி விவரங்கள், இந்த விரிவாக்கத்திற்கான நிதி ஆதாரத்தை உறுதி செய்யவில்லை. ரகசிய விசாரணைகள், நிதி ஆய்வு மற்றும் சந்தை விசாரணைகள் ஆகியவற்றின் மூலம், SFPL நிறுவனம் விற்பனையை மறைத்தும், செலவுகளை செயற்கையாக அதிகரித்தும் வரி செலுத்துவதைத் கணிசமாகக் குறைத்து வருவது வருமானவரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது சோதனையின்போது, வருமான வரித்துறையினர் ரொக்கம், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள் மற்றும் கணக்கில் வராத விற்பனை தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வருமானவரித்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.